தலைப்புச் செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தராக கலாநிதி அப்துல் மஜீத் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக – அந்தப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி, கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு – இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் நேற்றைய தினத்துடன் (2024.08.08) நிறைவடைந்துள்ள நிலையில், கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் – பதில் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உபவேந்தர் நியமிக்கப்படும் வரை – பதில் உபவேந்தராக கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் பதவி வகிப்பார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய (06ஆவது) உபவேந்தரை நியமிப்பதற்கான நடைமுறைகள் இடம்பெற்று – பல்கலைக்கழக பேரவையினால் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்கியுள்ளதாலும் – தேர்தல் சட்டங்களுக்கு அமைய, தேர்தலின் பின்னர் தெரிவுசெய்யப்படும் புதிய ஜனாதிபதியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் நியமிக்கப்படுவற்கான வாய்ப்புக்கள் உள்ளன.