நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

🕔 February 9, 2016

Sarath fonseka - 086பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்த சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின்போது இலங்கை ராணுவத்தின் தளபதியாக இருந்து செயற்பட்டார்.

பின்னர் அரசியலுக்குள் நுழைந்த பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆயினும், அதே ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா, ராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமல் செய்யப்பட்டது.

ஆயினும், 2012 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு, பொன்சேகா ஆதரவளித்து தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகா தோல்லியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஐ.தே.முன்னணியுடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி அண்மையில் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிலும் கைத்சாத்திட்டது.

இதன் அடிப்படையிலேயே, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்