தலைப்புச் செய்திகள்

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில் (ஐரிஎன்) கடமையாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திரா, தான் கடமையாற்றிய நிறுவனத்தின் தலைவர் ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக ஃபேஸ்புக்கில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அவரது துணிச்சலையும், ‘காட்டுமிராண்டித்தனமான செயலை’ அச்சமின்றி அம்பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகளையும் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையொன்றின் வழியாக பாராட்டியுள்ளது.

‘இது குறித்து ஐடிஎன் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தாலும், பொறுப்பாளர்கள் யாரும் அது குறித்து கவனிக்காததால், தன் சுயமரியாதையை காக்க, பணியை விட்டு விலக முடிவு செய்ததாக இஷாரா குறிப்பிட்டுள்ளார். தமது நிறுவனத்தில் பெண்கள் தொடர்ந்து இத்தகைய துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சூழல் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்’ என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைச் செய்தாலும், இத்தகைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியல் பாதுகாப்பைப் பெறுவதாக ஊடக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

‘எனவே, நாட்டின் அரசியல் தலைமை இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் தண்டனைச் சட்டத்தின் கீழ் – பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் கடுமையான குற்றமாகும். இந்தச் சம்பவம், இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் அத்தகைய நபர்கள் சுதந்திரமாக நடந்துகொள்வது, நமது நாட்டின் ஆட்சியில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தும் மற்றொரு சந்தர்ப்பமாகும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் ஊடகவியலாளர்கள் தமது ஊடகப் பணிகளை தொல்லைகள் இன்றி சுதந்திரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது – ஊடக நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.