முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 February 7, 2023

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்று காணாமல் போயுள்ளதாக – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சாட்சியமாக பெயரிடப்பட்ட இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட ஆவணமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், நொவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் – மோதர மீன்பிடித் துறைமுகத்தை ‘சீ கல்ஃப் யு.கே (Sea Gulf U.K) எனும் நிறுவனத்திற்கு, குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு, இலங்கைமீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை மீது செல்வாக்குச் செலுத்தியதாக, பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, லஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள லஞ்சக் குற்றத்தை புரிந்தமைக்காக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கவைாக 55 ஆவணங்களை விசாரணைக்கு முன்வைக்கவுள்ளதாக வழக்குத் தாக்கல் மூலம் நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்தது.

ராஜித சேனாரத்னவுக்கு மேலதிகமாக இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் உபாலி லியனகே மற்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ரவீந்திர முனசிங்க ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்