அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

🕔 February 7, 2023

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கவிருந்தது.

இதன் பொருட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதியை குறித்த நிறுவனம் பெற்று, மேற்படி வீட்டுத் திட்டததை கல்நாட்டி இன்று காலை 11 மணிக்கு ஆரம்பிக்கவிருந்தது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள நிறுவன உத்தியோகத்தர்களை சிலர் தொலைபேசியில் மிரட்டி, அந்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கக் கூடாது எனக் கூறியதாக, அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, இறக்காமம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் இருவர், அந்த இடத்துக்கு வந்து – குறித்த வீடுகள் அமையவுள்ள இடம் – இறக்காமம் பிரதேச செயலகப் பகுதிக்குரியது என்று கூறியதோடு, அந்தத் திட்டத்தை ஆரம்பிக்கக் கூடாது எனத் தடுத்தனர்.

அதன்போது அங்கு வருகை தந்திருந்த அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான ஏ.எல். அஸ்மல் ஆகியோர்; “எல்லைப் பிரச்சினையை பின்னர் தீர்த்துக் கொள்வோம், இப்போது ஏழை மக்களுக்கு வந்துள்ள வீட்டுத் திட்டத்தை எல்லோருமாகச் சேர்ந்து ஆரம்பிப்போம்” எனக் கூறியபோதும், அதனை இறக்காமம் தரப்பினர் நிராகரித்து விட்டனர்.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் இறக்காமம் கிராம சேவை உத்தியோகத்தர்களையும் அவர்கள் பயணித்த பிரதேச செயலகத்துக்குரிய வாகனத்தையும் தடுத்து வைத்து, தமது வீட்டுத் திட்டத்துக்கான கல்நாட்டும் வைபவத்தை தடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

பிரச்சினை என்ன?

கற்சேனை பகுதி – நெற் செய்கை காணிகள் நிறைந்த ஓர் இடமாகும். அந்தப் பகுதி அட்டாளைச்சேனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த கற்சேனை பகுதி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது என்றும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது என்றும் அந்தத்த தரப்பினரால் வாதிடப்படுகிறது.

இதனால், கற்சேனையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போதெல்லாம் – அதற்கு தமது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் அனுமதி பெற வேண்டும் என, இறக்காமம் தரப்பினர் கூறுவதுண்டு. ஆனால், அதற்கு அட்டாளைச்சேனை தரப்பினர் அனுமதிப்பதில்லை. கற்சேனை பகுதி- அட்டாளைச்சேனை பிரிவில் அமைந்துள்ளதால் அதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையிடமிருந்தே அனுமதி வழங்கப்படும் என வாதிடுவர்.

வீடமைப்பு திட்டக் காணி யாருக்குரியது?

தற்போது கற்சேனை பகுதியில் மேற்படி வீட்டுத் திட்டத்தை அமைக்கும் பொருட்டு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முகைதீன் பாவா பாத்திமா குல்ஸும் என்பவர், தனது 02 ஏற்கர் காணியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அந்தக் காணிக்குரிய அளிப்புப் பத்திரத்தில் கற்சேனையில் உள்ள குறித்த 02 ஏக்கர் காணியும் அட்டாளைச்சேனை 17ஆம் பிரிவில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003 ஓகஸ்ட் 25ஆம் திகதி அந்த அளிப்புப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா – இறக்காமம் தரப்பினருடன் பேசுகிறார்

இந்த காணிப் பத்திரத்தின் அடிப்படையில் – தற்போது வீட்டுத் திட்டம் அமையவுள்ள இடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், குறித்த வீட்டுத் திட்டம் அமையவுள்ள இடம், தங்கள் எல்லைக்குட்பட்டது என – இறக்காமம் தரப்பினர் இன்று தெரிவித்த நிலையில், அதனை நிரூபிப்பதற்காக ஒரு வரைபடத்தினையும் காண்பித்தனர்.

அந்த வரைபடம் – நில அளவீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் 2013ஆம் ஆண்டே, அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே அந்த இடம் அட்டாளைச்சேனைக்கு உரியது என காணி அளிப்புப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

“வீட்டை அமைப்போம், பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக – கற்சேனை பகுதிக்கு கிடைக்கவுள்ள வீட்டுத் திட்டத்தை நாம் இழந்து விடக் கூடாது என்பதில் அட்டாளைச்சேனை தரப்பு உறுதியாக இருந்தது.

“வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்போம், எல்லைப் பிரச்சினை பற்றி இரண்டு பிரதேசமும் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பேசுவோம்” என்று அட்டாளைச்சேனை தரப்பினர் கேட்டுக் கொண்ட போதும், அதற்கு இறக்காமம் தரப்பினர் கடைசிவரை சம்மதிக்கவில்லை.

இதனால், இன்று குறித்த வீட்டுத் திட்டத்துக்கு கல்நடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இடம்பெறவில்லை.

கற்சேனையில் குடியிருப்போர் யார்?

கற்சேனையில் தற்போது 39 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அட்டாளைச்சேனை, இறக்காமம், ஏறாவூர் என பல பகுதிகளில் இருந்தும் வந்தவர்களாவர்.

அவர்களில் முதன் முதலாக கற்சேனையில் குடியேறியவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தாஜுன்நிஸா என்பவராவார். இவர் தனது கணவருடன் இங்கு குடியேறியதாக ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். கற்சேனைக்கு தாம் குறியேறி 06 மாதங்களின் பின்னரே, இரண்டாவது குடும்பம் குடியேறியதாகவும் கூறினார்.

முதலில் குடியேறிய தாஜுன்நிஸா

கற்சேனையில் குடியேறிய இரண்டாவது குடும்பத்தையும் ‘புதிது’ செய்தித்தளம் சந்தித்தது. அந்தக் குடும்பத் தலைவியின் பெயர் உம்மு ஹபீபா. அவரும் அட்டாளைச்சேனை – தைக்கா நகரைச் சேர்ந்தவராவார்.

“எங்களுக்கு 06 பிள்ளைகள், 04 பேருக்கு திருமணமாகி விட்டது. நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளுடன் தைக்கா நகரிலிருந்து இடம்பெயர்ந்து அட்டாளைச்சேனை – ஆலங்குளம் பகுதியில் வசித்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்து குடியேறினோம்” என்கிறார் உம்மு ஹபீபா.

இரண்டாவதாகக் குடியேறிய உம்மு ஹபீபா

கற்சேனையில் குடியிருக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பலர் – கழிப்பறை வசதிகள் இன்றியே இன்னும் உள்ளனர். தகரக் கொட்டில்களில் வாழும் இவர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே இவர்களுக்கு வீடுகள், அதனோடு அமைந்த பாடசாலை, பள்ளிவாசல் என, வீட்டுத் திட்டமொன்றை அமைத்து வழங்குவதற்கு ‘அந்நூர்’ அமைப்பு முன்வந்த போதும், அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை காரணமாக அந்தத் திட்டம் கைநழுவிப் போயுள்ளது.

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, இந்தத் திட்டம் கற்சேனைக்கு இனி கிடைக்காது என்றும், தூரப் பகுதி ஒன்றுக்கு இது வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

செய்ய வேண்டியது என்ன?

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகின்ற போதும், அதனை தீர்த்து வைப்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை என்பது – இங்கு குறித்துச் சொல்ல வேண்டிய கசப்பான உண்மையாகும்.

சில அரசியல்வாதிகளும் இந்த எல்லைப் பிரச்சினையை தமது சொந்த நலன்களுக்காக ஊதிப் பெருப்பித்த கதைகளும் உள்ளன.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு காணிகள் உள்ளதாகவும் – அதற்காகவே, அவர்கள் இந்தப் பகுதியை இறக்காமம் பிரதேசத்துடன் சேர்த்து விடுவதற்கு கடும் பிரயத்தனம் எடுப்பதாகவும் கற்சேனையில் இன்று நாம் சந்தித்த சில பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் குற்றச்சாட்டினை ‘புதிது’ செய்தித்தளத்தினால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

எதுஎவ்வாறாயினும் அட்டாளைச்சேனை – இறக்காமம் பிரதேச எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு – ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குரோதங்களை வளர்த்து, சண்டையிடக் கூடாது என்பதே, சமூகப் பற்றாளர்களின் விருப்பமாக உள்ளது.

இரண்டு தரப்பிலுமுள்ள பிரதேச செயலாளர்கள், நில அளவீட்டுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொடர்பான அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூடிப் பேசி – நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கு வர வேண்டும்.

அந்த முயற்சி தோல்வியடையுமாயின் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்து – அதனூடாக முடிவு ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு இந்தப் பிரச்சினையின் எச்சத்தைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்பதே நமது விருப்பமாகும்.

இறக்காம் பிரதேச செயலக வாகனத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
இறக்காம் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்
மக்களுடன் பேசும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுஸ்லா
வீட்டுத் திட்டம் அமையவிருந்த காணிக்குரிய பத்திரம்
இறக்காமம் பிரதேசத்தவர்கள் காண்பித்த, இறக்காமம் பிரதேச வரைபடம்
கற்சேனையில் அமைக்கப்படவிருந்த வீட்டுத் திட்டம்

Comments