புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

🕔 February 4, 2023

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர்.

பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக வாணி அறிமுகமானார்.

வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான் எனக் கூறப்படுகிறது

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை தேசியளவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றார்.

‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

கிட்டத்தட்ட இந்தியாவின் ஏராளமான மொழிகளில் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும் என பலரின் பாராட்டுக்களையும் பெற்றவர்.

வாணி ஜெயராம் அவர்களை ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சூரியன் எப்.எம். வானொலிக்காக ஒரு தடவை நேர்கண்டிருந்தார். அதிலிருந்து ஒரு சிறு பகுதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்