தலைப்புச் செய்திகள்

விட்டுச் சென்று விடுவாளோ என்கிற அச்சத்தில் நடந்த கொலை: பல்கலைக்கழக மாணவியைக் கொன்ற காதலன்

தனது காதலி தன்னை வேறு கைவிட்டு, வேறு நபரைக் காதலித்து விடுவாளோ எனும் அச்சத்தின் காரணமாகவே, அவரைக் கொன்றதாக, கொழும்பு குதிரைப்பந்தைய மைதானத்தில் காதலியை நேற்று (17) கத்தியால் குத்தி கொன்ற காதலன் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகராச்சி (வயது 24) என்ற பெண்ணே நேற்று பிற்பகல் 1.00 மணியளவில், அவருடைய காதலனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இறந்தவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவியாவார்.

கொலை செய்யப்பட்ட சதுரி – குடும்பத்தின் மூத்த மகளாவார். அவருக்கு பாடசாலையில் கற்கும் தங்கை ஒருவரும் உள்ளார்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சத்துரி, உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவானார்.

இந்த நிலையில், அவர் கல்வி சார்ந்த யூடியூப் சேனலை நடத்தி வந்ததாகவும், அவரின் பல்கலைக்கழக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அவளைக் கொன்ற காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவராவார். சந்தேக நபர் வெல்லம்பிட்டிய சித்தம்பஹுவ பகுதியைச் சேர்ந்த பசிந்து சதுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களில் தரம் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வந்துள்ளார்.

விட்டுச் சென்று விடுவாளோ எனும் அச்சம்

“எனக்கு அவள் வேண்டும். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளை முழு மனதுடன் நேசித்தேன், ஆனால் அவள் வேறொருவரிடம் செல்ல முயன்றாள்” என்று, கைது செய்யப்பட்ட காதலன் அழுகைக்கு மத்தியில் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தனது காதலி தன்னை விட்டு – வேறு நபருக்காக பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற அச்சத்தில் காதலன் இருந்ததாகவும், அதனால் – அவருக்கு காதலன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்ற ஆண் மாணவர்களுடனும் ஆண்களுடனும் தனது காதலி பேசுவதையும் அவர் தடை செய்துள்ளார்.

“நான் சொன்னதை அவள் கேட்கவில்லை. எனவே, என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை” என சந்தேக நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்தார்.

கொலை செய்வதற்காக வாங்கிய கத்தி

கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அவர் கடையொன்றில் இருந்து கொள்வனவு செய்து – கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் தனது பையில் கத்தியை எடுத்துக் கொண்டு நேற்று (17) மதியம் 12.30 மணியளவில் காதலியுடன் குதிரைப் பந்தைய மைதானத்துக்கு வந்துள்ளார்.

தன்போது சந்தேகநபர் தனது காதலிக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றுள்ளார். அதற்கு காதலி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் காதலியை கொன்றுள்ளார்.

தனது காதலியைக் கொன்ற பின்னர், சந்தேக நபர் தனது பையில் இரத்தக் கறை படிந்த கத்தியுடன் குதிரைப் பந்தைய மைதானத்தில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடி, கையில் இருந்த இரத்தத்தை பையில் துடைத்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய மாணவர் பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடுவது பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

தற்கொலை செய்ய இருந்தாரா?

பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவன், பின்னர் வெல்லம்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கையடக்கத் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி ஆற்றில் குதித்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நோக்கில் அவர் வீட்டை விட்டு வெளியேறினாரா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், அவர் வீடு திரும்பியதும், அவரை கைது செய்ய பொலிஸார் அவரின் வீட்டுக்கு வந்தனர்.

அவரை கைது செய்த பொலிஸார், காதலியை கொல்ல பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர்.