பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும்

🕔 November 28, 2022

பிரா அணிவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பல்வேறு கட்டுக்கதைகளும் பொய்யான நம்பிக்கைகளும் சமூகத்தில் உள்ளன.

பிரா எனப்படும் மார்புக்கச்சை குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் இக்காலத்திலும் அவை குறித்த தவறான நம்பிக்கைகள் இன்றளவும் பெண்களிடையே நிலவிவருகின்றன.

எப்படிப்பட்ட பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும், தவறான பிரா அணிந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என, பல கேள்விகள் பெண்களுக்கு எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கும் பிரா குறித்த தவறான கற்பிதங்களுக்கும் விடையளிக்கிறது இக்கட்டுரை. 

இதுதொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழுக்கு பதிலளித்தார்.

சரியான அளவில் பிரா அணியாவிட்டால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் 

சரியான அளவில் பிரா அணியாத பெண்களிடம் அவர்களுக்கு ஏற்பட்ட விலா எலும்பு வலி பற்றி நான் ஒருமுறை விளக்கியபோது, பலரும் அதிர்ச்சியடைந்தனர். சரியான அளவை தேர்வு செய்வதில் அவர்களிடம் குழப்பம் இருந்தது. பெரும்பாலானவர்கள் சரியான அளவிலான பிரா அணிவதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.

நான் பார்த்த சில பெண்கள், பிரா அணியும் பழக்கத்தால், அவர்களின் முதுகுப் பகுதியில் தழும்பு ஏற்பட்டிருக்கும், ஒரு கோடு போல, தோல் மீது பிராவின் அச்சு பதிந்து பள்ளமாகவே தோல்பகுதி மாறிய நிலை கூட ஏற்பட்டுள்ளது.

இறுக்கமாக அணிவதால், தொடர்ந்து கழுத்துப் பகுதி, தோள்பட்டை பகுதிகள் ஒரு வித இறுக்கத்துடன் கட்டிப்போட்டவாறு இருக்கும். ஒரு சிலர், வெளியிடங்கள், பணியிடங்களில் இருந்து வீட்டுக்கு வந்தாலும்கூட, தொடர்ந்து இறுக்கமாக பிரா அணிந்திருப்பார்கள்.

அவ்வாறு நீண்ட நேரம் இறுக்கமான பிரா அணிந்தால், வலியின் தீவிரத்தன்மை விலா எலும்பை பாதிக்கும். இறுக்கமான பிரா அணிந்தால் வியர்வை வெளியேறுவதில் சிக்கல், தோல் அரிப்பு ஏற்படும். சில நேரம், ரத்த ஓட்டத்திற்கு அது இடைஞ்சலாகும் வாய்ப்பும் உள்ளது.    

ஒரே அளவு பிராவை தொடர்ந்து பயன்படுத்தலாமா?

பிரா என்பது நீங்கள் வேலை செய்யும்போது, மார்பகங்களை குலுங்காமல் இருப்பதற்கான ஓர் உடை. அதனால் அதை மிகவும் இறுக்கமாகவோ, தளர்வாகவோ அணியக்கூடாது என்பதுதான் அவசியமான ஒன்று.

ஒருமுறை நீங்கள் சரியான அளவில் பிரா வாங்கிவிட்டதாக உணர்ந்தால், அதையே பல ஆண்டுகளுக்குப் பின்பற்றுவது தவறு. அவ்வப்போது, உங்கள் மார்பக அளவை பொறுத்து அளவை மாற்றிக்கொள்வதுதான் சரியானதாகும்.

மார்பகங்கள் சரியாதா?

பிரா அணிவது பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் நிலவுகின்றன. அதில் ஒன்றுதான், பிரா அணிவதால் மார்பகங்கள் சரிந்துபோகாமல் இருக்கும் என்பது. அது ஒரு கற்பிதம்.

பிரா அணிந்தால்கூட, முதுமை அடையும்போது மார்பகங்கள் சரிவது இயற்கை. மரபியல் ரீதியாகவும் சரிவு ஏற்படும். அதேபோல, அதிகமாக மார்பகங்கள் குலுங்குவது போன்ற வேலைகளை செய்பவர்களுக்கு இளமையில் கூட சரிவு ஏற்படும். எத்தனை குழந்தைகளுக்கு பால் கொடுத்தார்கள் என்பதும் அதில் அடங்கும்.

மார்பகத்தின் எடை அதிகமாக இருந்தால்கூட இயல்பாகவே சரியும் நிலை ஏற்படும். அதனால், பிரா அணிந்தால், 100 சதவீதம் சரிவைத் தடுக்கலாம் என்பது கட்டுக்கதை. சரியான அளவில் அணிந்தால், மார்பகம் அதன் இயல்பில் இருக்க நீங்கள் உதவுகிறீர்கள் என்று பொருளாகும்.

பால் கட்டும் பிரச்சினையை தடுக்கலாமா?

பிரா அணிவதால் பால் கட்டும் பிரச்சினையைத் தடுக்கலாம் என்பதும் மூடநம்பிக்கைதான். எளிமையான பருத்தி பிரா, ஸ்ட்ராப் இல்லாத பிரா, வியர்வை உறிஞ்சும் பிரா, பாலூட்டும் தாய்மாருக்கான ‘நேர்சிங் பிரா’ என சுமார் 40 வகையான பிரா கிடைக்கின்றன.

அதில் பாலூட்டும் தாய்மாருக்கான பிராவில் ஒருவேளை பால் சுரப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில், பால் வழிந்தால், அதனை உறிஞ்சும் வசதியுள்ள நேர்சிங் பிரா அணிவதில் தவறில்லை. ஆனால், பிரா அணிந்தால், பால் கட்டுவதைத் தடுக்கலாம் என்பது தவறு.

பாலூட்டும் மாதங்களில் மார்பகங்களின் அளவு அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், குழந்தைக்குப் பால் கொடுப்பது, அதிகமான பாலை வெளியேற்றுவது என்பதைத் தவிர பால்கட்டுவதை தடுக்க வேறு வழியில்லை.

எவ்வகை பிரா நல்லது?

பருத்தி பிரா நம் ஊரின் தட்பவெப்பத்திற்கு ஏற்றது. ஆனால், சிந்தெடிக் அணிவதில் தவறில்லை. அவ்வப்போது அணிந்துகொண்டு, தேவையற்ற நேரத்தில் அணியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரின் தேவையைப் பொருத்து அணிந்துகொள்வது நல்லது. 

புற்றுநோயும் பிராவும் – கதைகளிலுள்ள உண்மை என்ன?

பிரா அணிவதால் புற்று நோய் வராது என்றும், வரும் என்றும் மூடநம்பிக்கைகள் உலகம் முழுவதும் நிலவுகிறன. இதுவரை எந்த ஆய்வுகளிலும்  மார்பக புற்றுநோய் வருவதற்கும் பிரா அணிவதற்கும் தொடர்பு உள்ளது என்றோ இல்லை என்றோ நிரூபிக்கப்படவில்லை.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண்டும் ‘நோ பிரா டே’ என்ற நாளை ஒக்டோபர் 13ம் திகதி அனுசரிக்கிறார்கள். பிரா அணிவது பற்றி கூச்சமின்றி உரையாடலை பெண்கள் குறைந்தபட்சம் அவர்களுக்குள் பேசிக்கொள்வதும், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் தற்போதைய தேவையாகும்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்