
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 29 கைதிகள் இன்னும் சரணடையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட கலவரத்தில் அடையாளம் காணப்பட்ட கைதிகள் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியள்ளார்.
“218 கைதிகள் சேனாபுர முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர், 80 கைதிகள் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளனர். மேலும் ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
29 கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், இன்னும் அவர்கள் சரணடையவில்லை எனவும் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு கைதிகள் குளிக்கும் போது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு, கைதிகளுக்கிடையில் சண்டையாக மாறியது. பின்னர் அது புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் வன்முறை சூழ்நிலையானது. அதன்போது அங்கிருந்து பலர் தப்பிச் சென்றனர்.
சண்டையில் ஈடுபட்ட தரப்பினர் புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதன் போது வளாகத்தில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை தணித்தனர்.
சம்பவத்தில் நான்கு கைதிகள் மற்றும் ஒரு ராணுவ உத்தியோகத்தர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உத்தரவிட்டார்.
தொடர்பான தகவல்: கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண்



