விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல்

🕔 October 20, 2022

ரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் மதுபானமும் பௌத்த விகாரையொன்றில் ஏலத்துக்கு விடப்பட்டதாகவும், இதனை தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை – விகாரையின் பௌத்த பிக்கு தாக்கியதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அநுராதபுரம், கெக்கிராவ மற்றும் மடத்துகமவுக்கு இடையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற கண்காட்சி மற்றும் பாடல் கச்சேரியின் போது இந்த ஏலம் இடம்பெற்றது.

பூக்கூடை (குசும் படுனா) ஏலத்துக்கு விடப்படுவதற்கு முன்னர், இரண்டு பியர் போத்தல்களும் 2,800 ரூபாவுக்கு ஏலம் போனது.

நகரின் பிரதான பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் விகாரையின் வதிவிடத் துறவி மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள் குழுவினால் இந்த ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பியர் போத்தல்கள் முதலில் ஏலம் விடப்பட்டன. அதன்பின், அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பூக்கூடையை ஏலம் விட்ட அமைப்பாளர்கள், பின்னர் மது போத்தலை ஏலத்துக்கு வைத்தனர்.

இதன்போது நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட விருந்தினராக வந்திருந்த இளம் பொலிஸ் அதிகாரி ஒருவர், மது போத்தலை ஏலத்தில் இருந்து அகற்றுமாறு கோரியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆசிரியரான வதிவிட பிக்குவினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் விகாரையில் மதுபானம் ஏலம் விடப்படுவது ஒழுக்கக்கேடானது, மதத்துக்கு எதிரானது என பொலிஸ் அதிகாரி பிக்குகளிடம் சுட்டிக்காட்டியதையடுத்து, மதுபான போத்தல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மதுபான போத்தலை ஏலம் விடாமையினால் தங்களுக்கு 100,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வதிவிட பிக்குவின் நடத்தையை கிராம மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்