பிரபாகரன் வேடத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் மரணம்

🕔 October 2, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லங்கை சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட ‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘பிரபாகரன்’ எனும் இருமொழி (சிங்கம் மற்றும் தமிழ்) திரைப்படத்தில் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று தர்ஷன் நடித்திருந்தார்.

இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான ‘இனி அவன்’ (Ini Avan – Him, Here After) தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் (FESTIVAL DE CANNES), 2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏசியன் அமெரிகன் சர்வதேச திரைப்பட விழாவிலும் (Asian American International Film Festival) ‘இனி அவன்’ 2013ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் நடித்திருந்தார்.

தொலைக்காட்சி நாடகத்திலிருந்து சினிமாவுக்கு

இலங்கையின் மலையகப் பிரதேசமான ரக்வானையில் பிறந்த தர்ஷன் தர்மராஜ் – 2008ஆம் ஆண்டு ஏ9 (A9) எனும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகத்தின் மூலமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘கோமாளி கிங்ஸ்’-இல், ‘மோகன்’ எனும் கதைப் பாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு வெளியான ‘கோ’மாளி கிங்ஸ்’ முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது.

இறுதியாக இவர் ‘ரெல்ல வெரல்லட் ஆதரே’ மற்றும் ‘கொலம்ப’ ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார்.

தர்ஷன் இறக்கும் போது அவருக்கு 41 வயது. அவரின் மனைவி சுபாஷினி. இவர்களுக்கு மகளொருவர் உள்ளார்.

முரளி 800

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட ‘முரளி 800’ தமிழ் திரைப்படத்தில் தர்ஷன் நடிக்கவிருந்ததாகவும், அவருக்கு நேரம் கிடைக்காமை காரணமாக அந்தப் படத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை எனவும், ‘முரளி 800’ திரைப்படத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளரும் படத்தில் நடிப்பவருமான ஊடகவியலாளர் ஷியாஉல் ஹசன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

“தர்ஷன் கடினமான ஓர் உழைப்பாளி. எடுத்த காரியத்தை முடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார். மற்றவர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர். திரைப்படத்துறையில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பொருளாதாரத்தில் மிகக் கஷ்டங்களை எதிர்கொண்டார்” என, தர்ஷன் குறித்து ஷியா கூறுகின்றார்.

“தர்ஷனுடன் ‘நெதயோ’ எனும் சிங்கள நாடகத்தில் இணைந்து நடித்த குறும்பட இயக்குநரும், ஊடகவியலாளருமான மணிவண்ணன் பிபிசி தமிழுடன் பேசும்போது; “தர்ஷன் கனிவான மனிதர்” என்றார்.

“புதிய கலைஞர்களுடனும் அன்பாக பேசுவார். அவர் பங்களிக்கும் படைப்புகளின் வெற்றிக்காக மேலதிக பொறுப்புக்களை தானாக முன்வந்து அவர் செய்வதை நான் கண்டிருக்கிறேன்” என்கிறார் மணிவண்ணன்.

‘அத்தி பூத்தாற் போல்’, சிங்கள சினிமாவில் எப்போதாவது சில தமிழர்கள் ஒளிர்வதுண்டு. அவ்வாறானவர்களில் தர்ஷனும் ஒருவர். ஆனால், அந்த ஒளி விளக்கு இத்தனை விரைவாக அணைந்து விடும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்