தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆணைக்குழு கடிதம்

🕔 September 27, 2022

த்தேச ‘தேர்தல் பிரசார செலவு/பிரசார நிதி’ சீர்திருத்த சட்டமூலத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என தாம் நம்புவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சட்ட வரைவாளர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் – வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் – மக்களின் ஆணை மற்றும் விருப்பங்களைப் பெறுவதற்காக செலவிடும் வரம்பற்ற நிதியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்படி சட்டமூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் தொடர்பான செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல், தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் தினத்துக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்னடத்தை விதிகள் மற்றும் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியன மேற்படி சட்டமூலத்தில் முன்மொழிவுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதவிக் காலத்தில் மக்களின் இறையாண்மையை தவறாகப் பயன்படுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் சட்டங்களை உருவாக்குதல், வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களுக்கு சட்டப்பூர்வமான பொறுப்புக்கூறல், தேர்தல் தொடர்பான புகார்களை விரைவாகத் தீர்க்க தேர்தல் குழுவை அமைத்தல் போன்ற முன்மொழிவுகளும் மேற்படி சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்