தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்: நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு

🕔 September 22, 2022

– முனீரா அபூபக்கர் –

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல புதிய செயற்திட்டங்களை அதிகார சபை அடையாளம் கண்டுள்ளதுடன், பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தலைவர் கூறினார்.

560 வீடுகளைக் கொண்ட கொழும்பு, கிருலப்பனை, மிஹிந்துபுர வீடமைப்புத் திட்டப் பணிகளை இன்று (22) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய சிடிசி இன்டஸ்ட்ரியல் இன்பாஸ் நிறுவனத் தலைவர் வை.எஸ்.ஆர். வெங்கடராவ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை – இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள சி.டி.சி இண்டஸ்ட்ரியல் இன்பாஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்துக்கான மொத்த முதலீடு 51 மில்லியன் டொலர்கள். இதன் நிர்மாணப் பணிகள் 36 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இந்த வீடமைப்புத் திட்டம் தலா 24 மாடிகளைக் கொண்ட இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. அங்கு 650 சதுர அடியில் 420 வீடுகளும், 850 சதுர அடியில் 140 வீடுகளும் கட்டப்படும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அங்கு மேலும் கூறுகையில்; “நாம் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது அதனை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போவதே பிரதான பிரச்சினையாகும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சமீபத்திய கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

ஒரு நாடு என்ற வகையில், இன்று நாம் நேர்மறையான எண்ணத்துடன் முன்னேற வேண்டும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை – ஒரு நிறுவனமாக அதற்கான பல திட்டங்களைத் தயாரித்துள்ளது. அவற்றை விரைவாக செயல்படுத்தி வருகிறோம். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை விரைவில் முடிக்க நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

கிருலப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2.39 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கான ஆலோசனைகளை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் வழங்கி வருகின்றது.

Comments