வலிப்பு ஏற்படுவோரின் கையில் இரும்பைக் கொடுப்பதால் என்ன பயன்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

🕔 September 22, 2022

லிப்பு ஏற்படும் நபர்களின் கைளில் இரும்பைக் கொடுப்பதால் எந்தப் பயனும் கிடையாது என்றும், அது மூட நம்பிக்கை எனவும் பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையின் ஒரு பக்கத்திலேயோ அல்லது முழுவதிலும் திடீரென தோன்றுகிற ‘எலெக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜால்’ வலிப்பு உண்டாகிறது.

அதாவது மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது அவற்றுக்கு இடையே இயல்பாக சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தாலோ, அதீத அழுத்தத்தாலோ, மூளையில் உருவாகிற இந்த மின்சாரம், அதிகமாக உருவாகி, நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அந்நேரத்தில் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை, கால்கள் இழுக்க தொடங்குவதை வலிப்பு என்கிறோம்.

கை மற்றும் கால் வெட்டி இழுத்து, வாயில் நுரை வருவதுதான் வலிப்பு என்று மக்கள் பலரும் எண்ணுகிறார்கள்.

வலிப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்பு. இரண்டாவது மூளை முழுவதும் ஏற்படும் வலிப்பு.

மூளை முழுவதும் ஏற்படாமல், ஒரு பகுதியில் தோன்றி, அதிலேயே முடிவுடைந்துவிடும் வலிப்பை ஃபோக்கல் என்கிறோம். இது உடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் பாதிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, திடீரென கண் சிமிட்டுவது. முகம் சுளித்து இழுப்பது, முறைத்து பார்த்து கொண்டே இருப்பது போன்ற சிறிய அறிகுறிகள் முப்பது வினாடிகளோ, ஒரு நிமிடமோ வந்துவிட்டு அகன்றுவிடும்.

ஒருவருக்கு வலிப்பு வந்தால் அருகிலிருப்பவர்கள் செய்ய வேண்டியவை

  • ஃபோக்கல் பாதிப்பாக இருந்தால், உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் வலிப்பு வருவதை அவர்களே உணர்ந்து, கட்டுபாடோடு செயல்பட்டு, சமாளித்து பாதுகாப்பாக இருந்து விடுவார்கள்.
  • மூளை முழுவதும் அதிக மின்சக்தி வரும்போது, சுயநினைவிழந்து விடுவார்கள். கீழே விழுவார்கள். கை, கால், தசைகள் இழுக்கும். பற்களை கடிப்பார்கள். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  • இதனை பார்த்ததும் பலரும் பயப்படுவார்கள். அவர்களின் பக்கத்தில் செல்வதற்கே அஞ்சுவார்கள்.
  • ஆனால், அத்தகைய நேரங்களில் அவர்களோடு இருக்க வேண்டும். வழக்கமாக ஒன்றிரண்டு நிமிடங்களில் அந்த வலிப்பு நின்று விடும்.
  • அது எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று உற்று கவனிக்க வேண்டும். அவருடைய உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன? எப்போது தொடங்கியது? எப்போது முடிகிறது? என்கிற விவரங்களை மருத்துவரிடம் சொன்னால், அதன் தீவிர தன்மையை அளவிட மிகவும் உதவியாக இருக்கும். அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை மருத்துவர் முடிவு செய்ய முடியும்.
  • ஆனால், வலிப்பு வருகின்ற நேரத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் அவர் இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வது அவசியம்.
  • வலிப்பு நின்றவுடன், அவர்கள் மயங்கி விடுவார்கள். தொண்டையில் இருக்கும் சளியை கையாள முடியாமல், விழுங்க தொடங்குவதால் நிமோனியா வந்து, பக்கவாதம் வரலாம்.
  • எனவே, வலிப்பு நீங்கி இவர்கள் மயங்கி இருக்கும்போது, மெதுவாக அவர்களை ஒருபுறமாக சாய்த்து படுக்க வைத்து, அவர்களின் தொண்டையில் இருக்கும் சளியை வெளியேற்ற உதவலாம். இந்நேரத்தில், வாய்க்குள் கையை இட்டு, அந்த சளியை வெளியே கொண்டு வரலாம். அதற்கு முன்னால், கையை வாய்க்குள் கொடுக்க கூடாது.
  • சுமார் நான்கு நிமிடத்தில் அவர்கள் எழுந்து விட்டால், பழச்சாறு கொடுக்கலாம். ஆனால், பல நிமிடங்களுக்கு பின்னரும், அவர்கள் எழுந்திருக்காவிட்டால், மருத்துவ அவசர ஊர்தியை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

அருகிலிருப்போர் செய்யக் கூடாதவை

  • நாக்கு கடிக்கிறார்கள் என்று யாராவது கையை உள்ளே விட்டால், அந்த கையை கடித்து துண்டாக்கும் வலிமை அவர்களிடம் இருக்கும். எனவே, அப்போது கையை வாய்க்குள் நுழைக்க வேண்டாம்.
  • கரண்டி கொடுப்பதும் மிகவும் ஆபத்தானது.
  • வெட்டி இழுக்கிற கை, கால்களை அமுக்க பார்ப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், எலும்பு உடைதல், மூட்டு விலகுதல் மற்றும் காயம் ஏற்படலாம்.
  • வாயில் கைக்குட்டை வைப்பதும் அவசியமில்லாதது.
  • இரும்பு கொடுப்பது பொதுவாக அனைவரும் செய்கிற தவறு. இது மூட நம்பிக்கை. அதனால் வலிப்பு நிற்காது. அதனால், அந்த நபர் உடலில் காயம் ஏற்படுத்தி கொள்ள நேரிடலாம்.
  • முதலுதவி கொடுப்பதாக கூறி, கை கால்களை பிடித்து விடுவது, செருப்பு மற்றும் சாக்ஸ் கொடுப்பது எல்லாமே மூடப் பழக்கவழக்கம்தான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்