‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என்று, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் கூறினாரா?: உண்மை என்ன?

🕔 September 21, 2022

– மப்றூக் –

“முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்”என்று கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் – அக்கரைப்பற்றில் நடந்த அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது கூறினார் எனத் தெரிவித்து, அந்த விடயம் சர்ச்சையாக்கப்பட்டு வருவதோடு, அவருக்கு எதிராக கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி கடந்த 16ஆம் திகதி அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸினர் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். கவிஞரும் நடிகருமான ஜெயபாலனும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அவரை ஹக்கீம் அழைத்து வந்திருக்கக் கூடும்.

ஜெயபாலன் கவிஞராக பெரிதும் அறியப்பட்டவர். பின்னர் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு இன்னும் பிரபலமானார். வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் ‘பேட்டக்காரன்’ எனும் முக்கிய பாத்திரமொன்றில் ஜெயபாலன் நடித்திருந்தார். இந்த படத்தில் உதவி இயக்குநராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த நண்பர் ஹசீன் பணியாற்றினார் என்பது மேலதிக தகவல்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள பலருடன் கவிஞர் ஜெயபாலனுக்கு நீண்ட நாள் நட்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜெயபாலனுடன் மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரப்பும் நட்பாக இருந்தார்.

இந்த நட்புக் குறித்தும் அஷ்ரப் உயிரோடு இருந்த போது, தானும் அஷ்ரப்பும் பேசிக் கொண்ட முக்கிய விடயங்கள் குறித்தும் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் பேசினார்.

அதன்போதுதான் ‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என, கவிஞர் ஜெயபாலன் கூறியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டும் – அந்த விடயம் சர்ச்சையாக்கப்பட்டும் வருகிறது. மேலும், இதை வைத்து ஜெயபாலனுக்கு எதிராக – தனிமனித தாக்குதலும் சமூக ஊடகங்களில் நடத்தப்படுகிறது.

உண்மையாகவே, “முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்” என்று ஜெயபாலன் கூறினாரா? இல்லை அவர் கூறியது திரிபுபடுத்தப்பட்டுள்ளதா? அல்லது தவறாக விளங்கப்பட்டுள்ளதா என்பதை, நேர்மையுடன் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ரஊப் ஹக்கீம் அழைத்து வந்து, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் ஜெயபாலன் பேசினார் என்பதற்காக, மு.காங்கிரஸின் எதிர் முகாமிலுள்ளோர் ஜெயபாலனைபலியெடுத்து விடக் கூடாது.

அப்படியென்றால் உண்மையில் ஜெயபாலன் என்னதான் பேசினார்?

அக்கரைப்பற்று உரையின் போது, அஷ்ரப்பும் தானும் பேசிக் கொண்ட பல்வேறு விடயங்கள் குறித்து நினைவுபடுத்திய ஜெயபாலன், ஓரிடத்தில்; “முஸ்லிம் மக்களின் உணவில் Red meat (சிவப்பு இறைச்சி) அதிகமாக இருப்பதும், Vegetable (மரக்கறி) குறைவாக இருப்பதும் – ஆரோக்கியமான முஸ்லிம் மக்களை உருவாக்க வேண்டிய பணிக்கு இடையூறாக இருக்கிறது” போன்ற பல விடயங்களை நாங்கள் பேசினோம்” என்றார்.

அஷ்ரப் உயிருடன் இருந்த போது அவரும் தானும் பேசிக் கொண்ட ஒரு விடயமாகவே இதனை ஜெயபாலன் குறிப்பிட்டாரே தவிர, அவரின் உரையின் எந்தவொரு இடத்திலும், ‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என, அவர் கூறவேயில்லை.

‘தமிழர் ஒருவர் முஸ்லிம்களின் உணவு விடயத்தில் தலையீடு செய்து பேசுகிறார்’ என, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை பரப்புவது மிகவும் ஆபத்தானதாகும். ஏற்கனவே கசப்புகள் நிறைந்து கிடக்கும் தமிழர் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில், நல்லதொரு உறவைக் கட்டியெழுப்புவதில் ஏகப்பட்ட தடைகள் இருக்கும் போது, இப்படி திரிபுபடுத்தப்பட்ட விடயங்களை எழுதுவது சமூக அக்கறையற்ற செயலாகும்.

புரிதலுக்கான விளக்கம்:

இறைச்சிகள் Red meat (சிவப்பு இறைச்சி), Whit meat (வெள்ளை இறைச்சி) என பிரித்துப் பார்க்கப்படுகின்றன.

Red meat (சிவப்பு இறைச்சி) எனும் வகைக்குள் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி போன்றவை அடங்கும்.

Whit meat (வெள்ளை இறைச்சி) என்பதில் கோழியிறைச்சி, மீன் மற்றும் பறவைகளின் இறைச்சிகள் அடங்கும்

கவிஞர் ஜெயபாலனின் உரையின் பகுதி

Comments