
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறையில் இப்போது கொழும்பில் உள்ள அவரின் வழக்கறிஞர்கள் கூடுதல் ஆவணங்களை இங்கு சமர்ப்பித்து நடைமுறையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி, நொவம்பர் மாதம் வரை அங்கு தங்குவதற்கான தனது ஆரம்ப திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
முதலில் எதிர்பார்த்தபடி தாய்லாந்தில் கோட்டாபய ராஜபக்ஷ அவரின் பாதுகாப்பின் பொருட்டு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படாத நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் இந்த மாத இறுதியில் இலங்கை திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோட்டா தாய்லாந்து வந்தடைந்தவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வெளியே நடமாட வேண்டாமென அந்த நாட்டு பொலிஸார் அறிவுறுத்தினர்.
கோட்டா தங்கியிருக்கும் ஹோட்டலின் பற்றிய தகவல் வெளியிடப்படாத நிலையில், அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இம்மாதம் கோட்டா இலங்கைக்கு திரும்பியதும், அவருக்கு அரச இல்லம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குரிய பாதுகாப்பை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.
இலங்கையிலிருந்து கடந்த மாதம் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டா, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
மருத்துவ சிகிச்சைக்கான வீசாவில் சிங்கப்பூருக்குள் நுழைந்த அவர், இரண்டு வாரங்கள் அங்கிருக்கும் வகையில் தனது வீசாவை நீடித்தார்.
பின்னர் அவரின் வீசாவை மேலும் நீட்டிக்க முடியாததால், கோட்டாவும் அவரின் மனைவியும் தாய்லாந்துக்குச் சென்றனர்.
இருப்பினும் தாய்லாந்தில் அவரது நடமாட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பவுள்ளார்.



