
– அஹமட் –
இந்திய நிவாரணங்களை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக புகார்கள் கிடைத்துள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இந்த நிவாரணத்தைக் கையாள்வதற்குரிய அதிகாரிகளிடம் இந்தப் பொறுப்பு வழங்கப்படாமல், அங்குள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரிடம் குறித்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் கண்டனம் வெளியிடுகின்றன.
இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றி – இறக்குவதற்காக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பல்நோக்கு அபிவிருத்தி படையணி உத்தியோகத்தர்கள் (ஒரு லட்சம் வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்கள்) பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் வெளியாரைக் கொண்டு பொருட்கள் ஏற்றியிறக்கப்பட்டதாகக் காண்பிக்கப்பட்டு, அதற்கான கட்டணப் பணம் பிரதேச செயலகத்தில் பெறப்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க கொவிட் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களைக் கையாள்வதற்கான பொறுப்பும் மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
சாதாரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத பல்வேறு சிறப்புச் சலுகைகள் மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டு, அவர் போஷிக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலகத் தகவல்கள் கூறுகின்றன.
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் விதிகளுக்கு மீறி வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மீளப் பெறப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய உதவியில் வழங்கப்பட்ட அரிசியை மட்டும் பொதுமக்களுக்கு வழங்கி விட்டு, பால் மாவை வழங்காமல் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இழுத்தடித்து வந்த நிலையில், அதனை ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக் காட்டி – செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, குறித்த பால் மாவை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.



