அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; தமிழக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடி: அரிசியை வழங்கி விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக பால்மாவை ‘கிடப்பில்’ வைத்திருப்பது ஏன்?

🕔 July 5, 2022

– அஹமட் –

மிழக அரசிடமிருந்து நிவாரணமாகக் கிடைத்த உணவுப் பொருட்களில் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட பால் மா இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக ‘கிடப்பில்’ போடப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது.

தமிழக அரசிடமிருந்து இலங்கைக்கு அரிசி, பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் – அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இவற்றினை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு, பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு ஒரு தொகை அரிசி மற்றும் பால்மா ஆகியவை ஒரு மாதத்துக்கு முன்னர் வழங்கப்பட்டன.

இவற்றில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 03 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் வீதம் அரிசி பகிர்ந்தளிக்கப்பட்ட போதிலும், கிடைக்கப்பெற்ற பால்மா இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல், பிரதேச செயலத்திலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

இது குறித்து அண்மையில் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வாய்மூலம் கேட்கப்பட்டபோது, சகல பொருட்களும் உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ஆயினும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 270 கிலோகிராமுக்கும் அதிகமான பால்மா, இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளதை ‘புதிது’ செய்திதளம் விசாரித்து அறிந்து கொண்டது.

எனவே, குறித்த பால்மாவினை உடனடியாக பொருத்தமானவர்களுக்கு வழங்கி வைக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை பொதுமக்கள் சார்பாக ‘புதிது’ செய்தித்தளம் கேட்டுக் கொள்கிறது.

இதேவேளை தமிழக நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – பொதுமக்களுக்கு வழங்கியதில் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை என, பொதுமக்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறையிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா?

Comments