சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் சீனக் குழுவுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

🕔 January 7, 2016

Hakeem - 03
– ஜெம்சாத் இக்பால் –

யாழ்ப்பாணம் மற்றும் கற்;பிட்டி பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த, மூவர் அடங்கிய சீனக் குழுவொன்று, இன்று வியாழக்கிழமை காலை அமைச்சர் ரஊப் ஹக்கீமை அவரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.

இலங்கையில் சிறுநீரக நோய் பரவி வருகின்ற நிலைமையில், சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான முதற் கட்ட நடவடிக்கையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு சீன மற்றும் இலங்கை அரசாங்கங்கள் கடந்த வருடம் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தன.

சீனாவுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீமும் சென்றிருந்தார். இதன்போது மேற்படி ஒப்பந்தம் உட்பட இரு ஒப்பந்தங்களில் அமைச்சர் ஹக்கீம் கைச்சாத்திட்டார்.

விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் தேசிய நீர் வழங்கல் தொடர்பில் இவ் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கையில் அதிகரித்து வரும் சிறுநீரக நோய் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடவடிக்கையாகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் சிறுநீரக நோய்க்கு ஏதுவாக அமையக்கூடிய காரணங்களை இனங்காணும் நடவடிக்கையாக நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேவைப்பாடுகளையும் அமைச்சர் ஹக்கீம் மூலம் அறிந்து கொண்டனர்.

இதற்கமைய நீர் சுத்திகரிப்பு, தூய நீர் ஆய்வு, நீரை பதப்படுத்தல், மழை நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் மாசடைவதை தடுப்பதற்கான ஆய்வுகளை சீனாவின் விஞ்ஞான கல்வி நிலையம் மேற்கொண்டுள்ளது.

மேலும், நீர் பகுப்பாய்வு தொடர்பில் பயிற்சிகள் மற்றும் கற்கை நெறிகளுக்கான புலமை பரிசில்களை வழங்குவதற்கு சீனாவின் விஞ்ஞான கல்வி நிலையமும், இலங்கையின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும் இணைந்து செயற்படவுள்ளன.

இதேவேளை, சீனத் தூதுக் குழுவினர் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்படி திட்டத்துக்கான உத்தேச ஆய்வு நிலையத்தையும், நீர் பகுப்பய்வு நிலையத்தையும் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை பார்வையிடவுள்ளனர். இதற்காக, 13 மில்லியன் டொலர் செலவில் கட்டட வசதிகளையும், உபகரண வசதிகளையும் சீன அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனத் தூதுக் குழுவினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டி.எம்.பி.யு. பஸ்நாயக்க, மேலதிகச் செயலாளர் எம். முயூனுதீன் மற்றும் தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஐ.ஏ. லத்தீப் உட்பட உயர் அதிகாரிகள் பங்குபற்றினர்.

மேற்படி இச்சந்திப்பை தொடர்ந்து, சீனத் தூதுக் குழுவினர் – அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடினர்.Hakeem - 02Hakeem - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்