கட்சி மாறப் போகிறேன் என்பது கற்பனைச் செய்தி; மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ்
– நவாஸ் சௌபி –
(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவுள்ளார் என்று, இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது கிடைத்த தகவல்கள் இங்கு கேள்வி, பதில்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன)
கேள்வி: நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் (ACMC) இணையப் போவதாக வெளியான செய்தி உண்மைதானா?
பதில்: கட்சிக்கும் தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக வெளியான எந்தவிதமான உண்மைத்தன்மையுமற்ற ஒரு செய்தியாகவே இதனை நான் கருதுகின்றேன். பூமுத்தீனின் கற்பனையில் உருவான இச்செய்தியை அவரது குரோதச் செயலாக நான் கண்டிக்கின்றேன். ஊடக ஒழுக்கமில்லாத ஒருவரின் ஈனச் செயலாகவும் இதை நான் காண்கின்றேன்.
கட்சி மாறவேண்டிய அவசியமும், அதற்காக யாருடனும் பேசவேண்டிய தேவையும் எனக்கு அறவே கிடையாது. முஸ்லிம் காங்கிரஸைவிட்டு இன்னுமொரு கட்சிக்கு செல்லுமளவிற்கு முஸ்லிம் காங்கிரஸினருக்கும் எனக்குமிடையில் எந்தவிதமான மனக்குரோதங்களோ, கசப்புணர்வகளோ ஒருபோதும் இருந்ததில்லை.
கேள்வி: அவ்வாறாயின் பாராளுமன்ற சிற்றூண்டிச் சாலையில் நீங்கள் றிசாட், அமீர் அலி ஆகியோருடன் உரையாடிய கதை என்ன?
பதில்: சிற்றூண்டிச் சாலையில் மட்டுமல்ல, சபையின் உள்ளும் புறமும், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பல இடங்களிலும் அவர்களோடு மட்டுமல்லாமல், சிங்கள, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எவரும் பரஸ்பரம் பேசிக்கொள்வது வழக்கம். இப்படி பேசுகின்றவர்கள் எல்லோரும் கட்சி மாறுவதற்குத்தான் பேசிக் கொள்கின்றார்கள் என்று கற்பனை செய்வதும், கருதுவதும், கனவு காண்பதும் முட்டாள்தனமானது.
கேள்வி: கட்சி மாறுவதற்காக பிரதி அமைச்சுப் பதவி பெற்றுத் தருவதாகவும், மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பொறுப்பாளராக நியமிப்பதாகவும் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: பூமுத்தீன் எழுதி இருப்பது போன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கும் எனக்குமிடையில் கட்சி மாறுவது பற்றியோ, அதற்கு பிரதி உபகாரமாக ஏதாவது பதவிகள் தருவதுபற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. அப்படி இருந்தும் இவ்வாறான ஒரு கட்டுக்கதை உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருப்பிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: கட்சிக்குள் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உள்ளக் குமுறலை அவர்களிடம் நீங்கள் அள்ளிக் கொட்டியதாகவும் சொல்லப்படுவது உண்மையா?
பதில்: இந்த பேச்சுக்கள் யாவும் மொத்தமாக பொய்யானது என்கிற போது அதில் எந்த ஒரு உண்மைக்கும் இடமில்லை. அவ்வாறு அள்ளிக் கொட்டும் அளவிற்கு எனக்கு கட்சியுடன் எந்த உள்ளக் குமுறலும் இல்லை.
கேள்வி: அலரிமாளிகை விருந்துபசார நிகழ்வொன்றிலும் ஊடகவியலாளர் ஒருவர் உங்களிடம் வில்பத்து விவகாரத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவும் பேசாமல் மௌனம் காப்பதாக கேட்டதாகவும், அதற்கு நீங்கள், ‘ஏனோ தெரியாது தலைவர் அதுவிடயத்தில் மௌனமாகவே இருக்கின்றார் றிசாத்தின் அரசியல் வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து செல்கிறது’ என்று கூறி பெருமூச்சு விட்டீர்களாமே!
பதில்: தலைவர் ரவூப் ஹக்கீம் எதையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் சமூகத்திற்காக பேசக் கூடியவர். அவர் எப்போதும் அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொள்பவர். இது இவ்வாறு இருக்க வில்பத்து கதைக்குள் என்னை இழுத்து, றிசாத்தின் அரசியல் வளர்ச்சி கண்டிருப்பதாக நான் பெருமூச்சு விட்டதாக கூறி இருப்பது கேலிக்குரியதாகும்.
கேள்வி: எம்பி பதவியை இராஜினாமாச் செய்த பிறகு, உயர் பதவி ஒன்றை நீங்கள் எதிர்பார்ப்பதாக உங்களைப் பற்றி கூறியிருப்பதற்கு என்ன பதில்?
பதில்: தேசிய பட்டியல் எம்பி பதவி கிடைத்த பிறகும் நான்; அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடக பணியில் தொடர்நதும் ஈடுபட்டுவருகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த பின்னரும் நான் அமைச்சரினதும் கட்சியினதும் ஊடகப் பணியிலேயே இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இருந்துவருவேன். அதற்கு மேலாக நான் உயர் பதவிகள் எவற்றையும் எதிர்பார்ப்பவனல்லன்.