
எரிபொருளுக்கான ‘க்யூஆர்’ (QR) முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுவதை அடுத்து, எரிபொருள் இறக்குமதி செய்ய அரசாங்கம் மாதாந்தம் சுமார் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மாதத்திற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
“இப்போது, நாங்கள் QR முறைமையின்படி எரிபொருளை வழங்குகின்றோம். எனவே நமக்கு சுமார் மூன்று கப்பல் ஏற்றும் பெட்ரோல் (ஒவ்வொன்றும் 35,000 டொன்) மற்றும் மூன்று கப்பல் டீசல் (தலா 40,000 டொன்) மட்டுமே தேவையாக உள்ளது”.
லங்கா இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் பெட்ரோல் மற்றும் டீசல் மாதத்தில் தலா ஒரு கப்பல் இறக்குமதி செய்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் மற்றும் டீசல் தலா இரண்டு கப்பல்களை மட்டுமே இறக்குமதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில எரிபொருள் நிலையங்கள் க்யூஆர் முறையைப் பின்பற்றவில்லை என்று என்று கூறிய அவர், அவை அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“விரைவில் அவர்களின் உரிமங்களை பறிப்போம். க்யூஆர் குறியீடு இருப்பதால், ஒதுக்கீட்டின்படி எவ்வளவு எரிபொருள் வழங்கப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். சில எரிபொருள் நிலைய உதவியாளர்கள் இது தொடர்பில் கணினியை கையாள முடியும் என்று நினைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு, மாத இறுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இறுதியில், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். எனவே, க்யூஆர் முறைமையின் படி எரிபொருள் வழங்குவதை உறுதிசெய்வது அவர்களுக்கு நல்லது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



