தலைப்புச் செய்திகள்

தாய்லாந்துக்கு கோட்டா பயணித்த பிரத்தியேக விமானத்துக்கான கட்டணத்தை இலங்கை செலுத்தியது: உறுதிப்படுத்தினார் அமைச்சர் பந்துல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் தாய்லாந்து சென்றமைக்கான கட்டணத்தை இலங்கை அரசு செலத்தியுள்ளது.

இதனை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்படி பயணத்துக்கான பணத்தை இலங்கை அரசு செலுத்தியதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன; “ஆம்” எனப் பதிலளித்ததோடு, “ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கமைய, தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன” என்றார்.

“முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன்” எனவும் அவர் இதன்போது கூறினார்.