மஹிந்தவிடம் சிஐடி 03 மணி நேரம் வாக்கு மூலம்: நீதிமன்றில் கடவுச் சீட்டை ஒப்படைக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு

🕔 May 26, 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நேற்று (25) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவரின் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக, நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மகிந்த ராஜபக்ஷ நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் 03 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்ட விடயத்தை சட்டமா அதிபர் சார்பில் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரை தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ – தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது தனது கடவுச்சீட்டு நாசப்படுத்தப்பட்டு விட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும், மே 09 கலவரத்தின் போது ஒரு சாரார் அவரின் வீட்டை சேதப்படுத்தி எரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்