அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் நாளை தொடக்கம் மட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

🕔 May 25, 2022

நாட்டில் நிலவும் வளப் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் பணிக்கு வருவதில் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் கருத்திற் கொண்டும், அரச செலவுகளைக் குறைக்கும் பொருட்டும், அரச பணிக்கு மிகவும் அத்தியவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன சுற்றுநிரூபம் ஒன்றினூடாக உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அரச அலுவலகங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்குப் பாதிப்பில்லாதவாறு, அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் மட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அத்தியவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களை நாளை (26) முதல் சேவைக்கு அழைப்பதற்கு வேலைத் திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்