நாடாளுமன்றுக்கு அதிகாரத்தை வழங்கும் 21ஆவது திருத்தம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

🕔 May 23, 2022

னாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவை அமைச்சர்கள் இப்போது கட்சித் தலைவர்களுக்கு முன்மொழிவை பரிந்துரைத்துள்ளனர். இது அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும்” என்றும் அந்த அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தை பலப்படுத்திய 19வது திருத்தத்தை ரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய 20வது திருத்தத்தை 21ஆவது திருத்தம் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவற்றை சுயாதீனமாக்குவதற்கும் முயற்சிக்கிறது.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மேற்படி சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ, இரட்டைப் பிரஜா உரிமையைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்