“எனது வீட்டை தாக்கிய அன்று, அச்சத்துடன் ஒரு அறையில் ஒளிந்திருந்தேன்”; அரசியலை விட்டும் விலகவுள்ளதாக கீதா எம்.பி தெரிவிப்பு

🕔 May 20, 2022

ரசியலில் இருந்து விலகிக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கடந்த 09ஆம் திகதி தனது வீட்டை 100 பேர் கொண்ட ஆண்கள் சுற்றி வளைத்துத் தாக்கியதாகவும், அப்போது அச்சத்துடன் தான் ஓர் அறையில் ஒளிந்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

தான் சுவிஸர்லாந்து நாட்டின் பிரஜையாக இருந்த நிலையில், மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக அந்தப் பிரஜாவுரிமையை தான் இல்லாமல் செய்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

04 தசாப்தங்கள் சினிமாவில் தான் உழைத்தமைக்காக தனக்குக் கிடைத்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் தனது வீட்டைத் தாக்கியவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றதாகவும் கீதா குமாரசிங்க கவலையுடன் தெரிவித்தார்.

“மீளப் பெறமுடியாத அந்த விருதுகளை ஏன் உடைத்து சேதப்படுத்தினீர்கள்” எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

“கடந்த 09ஆம் திகதி எனது வீட்டை 100 பேர் அளவில் வந்து தாக்கினார்கள். அந்த நேரத்தில் எனது வீட்டில் யாரும் இருக்கவில்லை. ஒரு பெண்ணாக நான் மட்டுமே இருந்தேன். எனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் தாக்கியவர்கள் யார் என்பது பதிவாகியுள்ளது”.

”மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் 13 வருடங்கள் நான் அரசியலில் உள்ளேன்.

எனது பெற்றோர் வழங்கிய காணியில் வீட்டை நான் நிர்மாணித்தது, மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான்.

எனது வீட்டில் அன்று இருந்த வாகனத்தையும் எரித்துள்ளார்கள்.

04 தசாப்த காலம் நான் சினிமாத்துறையில் உழைத்த பணத்தை விடவும், நான் பெற்றுக் கொண்ட விருதுகள் பெறுமதியானவை. தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் 30, 40 விருதுகளைபப் பெற்றுள்ளேன். அவற்றையும் சேதப்படுத்தியுள்ளார்கள். அவற்றினை இனி என்னால் பெற முடியாது.

சுவிஸர்லாந்தில் எனக்கு இருந்த பிரஜாவுரிமையை இல்லாமல் செய்து, நான் இலங்கைக்கு வந்தேன். இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னர் யாரும் இப்படிச் செய்யவில்லை. எனது பகுதி மக்களுக்குப் பணியாற்றுவதற்காகவே எனது சுவிஸர்லாந்து பிரஜாவுரிமையை இல்லாமல் செய்தேன்.

சுவிஸர்லாந்தில் இருந்திருந்தால் எனக்கு ஓய்வுதியம் கிடைத்திருக்கும். அவற்றையெல்லாம ஒதுக்கி விட்டுத்தான் நான் இங்கு வந்தேன்.

எனது வீட்டை ஏன் உடைத்தார்கள். அந்த மக்களுக்கு நான் சிறியதொரு தவறினையும் செய்யவில்லை.

எனது வீடு தாக்கப்படும் போது, தனியாக ஒரு அறையில் நான் மறைந்திருந்தேன்.

அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென நான் நினைக்கிறேன். மக்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது, அரசியலை நாம் எவ்வாறு முன்கொண்டு செல்வது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்