நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது: பிரதமர் எச்சரிக்கை

🕔 May 19, 2022

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார்.

இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

உலகம் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாகவும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.

இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளதாக அவர் சபையில் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

”எதிர்வரும் இரண்டு வருடங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். அதற்கான நகர வேலைத்திட்டம் இருக்க வேண்டும். கிராமிய வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் போகத்துக்கு தேவையான உரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எமக்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் விவசாய போகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். விவசாய இயந்திரங்களுக்கு டீசலை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எனினும், பெரும் போகத்துக்கு முழுமையாகவே உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஓகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதி தொடர்பிலேயே எமக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது” எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்