
விடுதலைப் புலிகள் அமைப்பினர் மே 18 அன்று தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முறையாக விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று (15) தெரிவித்துள்ளது.
மே 18ஆம் தேதி இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இந்திய உளவுப் பிரிவினர், அந்தத் தகவல்கள் பொதுவான தகவல்களாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்படி தகவல் உள்ளிட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படைகளுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



