அமரகீர்த்தி எம்.பி அடித்துக் கொல்லப்பட்டார்; சூட்டுக் காயங்கள் எவையும் உடலில் இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

🕔 May 14, 2022

நிட்டம்புவ பகுதியில் கடந்த 09ஆம் திகதி மரணமடைந்த பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக, அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் ஏற்பட்ட உள்ளக காயங்களே, அவரின் மரணத்துக்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரல தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என்று வெளியான தகவல்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் எந்தவித துப்பாக்கி சூட்டு அடையாளங்களும் கிடையாது என்றார்.

அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியே அவர் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தற்கொலை செய்துகொண்டமைக்கான எந்தவித சாத்தியமும் கிடையாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் மீது, கடந்த 09ம் திகதி அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் பின்னர், வன்முறையாக மாறியிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், அளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.

இதன்போது நிட்டம்புவ வழியாக பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து அவர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அமரகீர்த்தி அத்துகோரல துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக அப்போது கூறப்பட்டாலும், அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்