பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவிடம் கோட்டா கோரிக்கை: பேசப்பட்ட விடயங்கள் என்ன?

🕔 May 12, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாtவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (11) பிற்பகல் சரத் பொன்சேகா சந்தித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது, ​​நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரம் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பதவியை ஏற்றுக்கொண்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை  குறைத்துக் கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியதாக தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தங்களுடன் அமுல்படுத்தி, ஜனாதிபதிக்கான தற்போதைய பதவிக் காலம் முடியும் வரை செயற்படுமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

69 லட்சம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், அவ்வாறான பிரதிநிதித்துவம் இந்த நாட்டின் சமூகத்தில் இருக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இறுதியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தான் பிரதமராக பதவியேற்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டுக்குத் தேவையான புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர் ஜனாதிபதியுடனான நீண்ட கலந்துரையாடலை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் சாதகமாக அமைந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவுசெய்துள்ளார்.

அதில்; ‘பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கிறேன். காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.

ஆரம்பத்தில் இருந்தே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துணிச்சலான போராளிகளை முழு மனதுடன் ஆசிர்வதித்த நான், குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடாமல், ராஜபக்ஷக்களின் நெருக்கடிகளை தீர்க்கும் பங்காளியாக மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்