அதாஉல்லா தரப்பினருக்கு அக்கரைப்பற்றில் ஏற்பட்ட உடனடிச் ‘சூன்’: ராஜபக்ஷவினர் மீதான கோபத்துக்கு காரணம் என்ன? உளறிக் கொட்டினார் அஸ்மி

🕔 May 11, 2022

– மரிக்கார் –

ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தமையினை அடுத்து, ராஜபக்ஷவினரும் அவர்களின் ஆதரவானவர்களும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

ராஜபக்ஷ தரப்பினரின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துக்களை மக்கள் சேதப்படுத்தி, அவர்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவினரின் நெடுநாள் கூட்டாளியுமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் உள்ளுர் விசுவாசிகள் திடீரென நேற்று முன்தினம் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜநாமா செய்த பின்னர், ராஜபக்ஷவினருக்கு எதிராக ‘உடனடி ஆர்ப்பாட்டம்’ ஒன்றினை நடத்தியிருந்தனர்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினரும் அதாஉல்லாவின் கையாளுமான அஸ்மி ஏ. கபூர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அதாஉல்லாவின் புதல்வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான அஹமட் சக்கியும் கலந்து கொண்டார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ராஜபக்ஷக்களை சிறை அனுப்புவோம்’, ‘கோட்டா கோ ஹோம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை சிலர் தாங்கியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குகள் சேகரித்துக் கொடுத்தவர் அதாஉல்லா. ஆனால், அரசாங்கம் அமைந்த பிறகு அதாஉல்லாவை ராஜபக்ஷவினர் கழற்றி விட்டனர். அமைச்சர் பதவி எடுக்க வருமாறு கூறி – அதாஉல்லாவை அழைத்து விட்டு, எந்தப் பதவியும் கொடுக்காமல் வெறுங்கையுடன் அனுப்பி வைத்தமையினையெல்லாம் நாம் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டோம்.

இருந்தபோதும் ராஜபக்ஷவினருடன் அதாஉல்லா பகைக்கவில்லை. அமைச்சர் பதவியொன்றை எடுப்பதற்காக அவர் படாத பாடுகள் பட்டார். அன்னாருக்கு அமைச்சர் பதவி ‘அன்னா கிடைக்கும், இன்னா கிடைக்கும்’ என்று, அதாஉல்லாவின் ‘பேஸ்புக்’ போராளிகள் சலிக்காமல் எழுதிக் கொண்டேயிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் அதாஉல்லா தனது தந்திரத்தை மாற்ற நினைத்து, ராஜபக்ஷவினருக்கு எதிராக கொடிபிடித்த பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து பார்த்தார். அப்போதாவது ராஜபக்ஷவினர் தன்னுடன் சமரசத்துக்கு வந்து, அமைச்சர் பதவியொன்றைத் தருவார்களா என்பதே அந்த நகர்வின் எதிர்பார்ப்பாகும். ஆனால், அதற்கும் ராஜபக்ஷவினர் மசியவில்லை.

இதனால் கொதித்துப்போயிருந்தார் அதாஉல்லா. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் ராஜபக்ஷவினரின் பங்காளிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டார்கள். இதனையடுத்தே, அக்கரைப்பற்றில் அதாஉல்லாவின் மாநகர சபை உறுப்பினர் அஸ்மி தலைமையில் ராஜபக்ஷவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுவதாக படமொன்று காண்பிக்கப்பட்டது.

ராஜபக்ஷவினர் மீதான மக்களின் கோபத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை;

  • கருத்தியல் ரீதியாக ராஜபக்ஷவினரின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள், ராஜபக்ஷவினர் மீது கோபம் கொள்கின்றனர்.
  • ராஜபக்ஷவினரின் மோசமான ஆட்சி மீதுள்ள வெறுப்பு, ராஜபக்ஷவினர் மீது கோபமாகத் திரும்பியுள்ளது.
  • ராஜபக்ஷவினருக்கு எதிரணியில் இருக்கும் கட்சிகளின் ஆதவாளர்கள், தமது கட்சித் தலைமைகளின் கோபத்தை ராஜபக்ஷவினருக்கு எதிராகப் பிரதிபலிக்கின்றனர்.
  • அடுத்தது, தாம் விரும்பியதை ராஜபக்ஷவினர் கொடுக்காமமையினால், ராஜபக்ஷவினர் மீது சிலருக்கு ஏற்பட்டுள்ள கோபமாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கோபங்களில் அதாஉல்லா தரப்புக்கு வந்துள்ள கோபம், இறுதியில் கூறப்பட்டுள்ளதாகும்.

அதாஉல்லாவுக்கு இறுதிவரை அமைச்சர் பதவியொன்றை ராஜபக்ஷவினர் கொடுக்காமைதான் அஸ்மி போன்ற வகையறாக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபமாகும்.

இதனை நாம் கற்பனையில் கூறவில்லை. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அஸ்மியே இது குறித்து உளறிக் கொட்டியுள்ளார். ‘நாம் வாக்களித்த எமதூரின் மகனுக்கு துரோகம் செய்த ராஜபக்ஷக்கள் இதையும் விட அழிந்து நாசமடைய வேண்டும்’ என, தமது ஆர்ப்பாட்டம் குறித்து அஸ்மி விவரித்து எழுதியுள்ளார்.

ஆக, அதாஉல்லாவின் கையாட்களுக்கு ராஜபக்ஷக்கள் மீது வந்துள்ள கோபத்துக்கு காரணம் – சமூக அக்கறையோ, தேசப்பற்றோ அல்ல என்பதை மக்கள் விளங்காமலில்லை.

அப்படியென்றால், இந்த அரசாங்கத்தில் அதாஉலலாவுக்கு ஒரு குட்டி அமைச்சர் பதவியையேனும் ராஜபக்ஷவினர் கொடுத்திருந்தால், அஸ்மி வகையறாக்களுக்கு நேற்று முன்தினம் ‘சூன்’ எழும்பியிருக்கவும் மாட்டாது, நல்லாயிருந்த ‘காபட்’ வீதியை ‘டயர்’ போட்டு எரித்து நாசப்படுத்தியிருக்கவும் மாட்டார்கள்.

மேட்டர் இவ்வளவுதான்.

குறிப்பு: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, இதுவரை ராஜபக்ஷவினருக்கு எதிராக ஒரு வார்த்தையினையேனும் வாய் திறந்து பேசவுமில்லை. அவர்களுடனான உறவை அறுத்து விட்டதாக இதுவரை கூறவுமில்லை.

Comments