இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்; வாக்குச் சீட்டைக் காட்டிய சஜித் பிரேமதாஸ: உண்மையில் யார் ‘பால் போத்தல்’?

🕔 May 6, 2022

– மரைக்கார் –

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தனது வாக்குச் சீட்டில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அதனை பகிரங்கமாக காட்டியிருந்தார். இது குறித்து பலரும் பல்வேறு வகையான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்றமையினைக் காண முடிகிறது.

இவ்விடயத்தை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது புரிதலுக்கு ஏற்ப, கருத்துக்களையும் நையாண்டிகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

வழமைபோல் அதாஉல்லா எம்.பியின் ‘ரசிகர் மன்றத்தினர்’; சஜித் பிரேமதாஸவின் இந்த நடவடிக்கையை எள்ளிநகையாடி, அவரை அதாஉல்லா ஒரு தடவை சொன்னமை போல், ‘பால் போத்தல்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் சிலர்; ‘பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்குத்தான் இவர் வாக்களித்திருப்பார். அதனை ஏன் – பத்தாம் வகுப்பு சித்தியடைந்த மாணவன், தனது ‘ரெகோட் புக்’கை தூக்கிக் காட்டுவது போல் காட்டுகிறார்’ என கேலி செய்திருந்தனர்.

ஒவ்வொரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்வதில் நமது அறிவு, விவேகம் மற்றும் அனுபவம் போன்றவை அதிக தாக்கம் செலுத்தும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்தல் அவசியமாகும்.

உண்மையில் மேற்படி நபர்கள் நையாண்டி செய்யுமளவுக்கு சஜித் பிரேமதாஸ ‘பால் போத்தல்’தானா? அவர் அவ்வாறு நடந்து கொண்டமை ‘சிறுபிள்ளைத்தனமான’ செயற்பாடுதானா?

இதனை விளங்கிக் கொள்வதற்கு முன்னர், நேற்று பிரதி சபாநாயகர் தெரிவு விடயத்தில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்தல் அவசியமாகும்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு சுயாதீன குழு என கூறிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரேரிக்கப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தியினர் – இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரேரித்தனர்.

இதனால் வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இந்த வாக்கெடுப்பை ‘ரகசிய வாக்கெடுப்பாக’ நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்தியாஸுக்கு வாக்களிப்பர் என்றும், அது ஆட்சியாளர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ரகசிய வாக்கெடுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரினார்.

அதற்கு உடன்பட்ட சபாநாயகர் – ரகசிய வாக்கெடுப்புக்காக வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்றும், அந்த வாக்குச் சீட்டில் தாம் ஆதரிக்கும் வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு, வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கையொப்பத்தினையும் வாக்குச் சீட்டில் இட வேண்டும் என்றும் அறிவித்தார்.

இதற்கு சஜித் பிரேமதாஸ தனது எதிர்ப்பை வெளியிட்டார். வாக்குச் சீட்டில் வாக்களிப்பவர் தனது கையொப்பத்தை இட்டால், அது எப்படி ரகசியமாக இருக்கும்? எனக் கேள்வியெழுப்பி, அவ்வாறு கையொப்பமிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், நிலையியல் கட்டளையில் அவ்வாறுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய சபாநாயகர், சஜித் பிரேமதாஸவின் கோரிக்கையை நிராகரித்தார்.

மேற்படி வாக்களிப்பு ரகசியமாக நடந்தாலும், அதன் பிறகு ‘எந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாருக்கு வாக்ளித்தார்’ என்பதை கையொப்பங்களை வைத்து ஆட்சியாளர்கள் கண்டறிந்து கொள்வார்கள் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் வாதமாகும்.

இவற்றினையெல்லாம் குறிக்கும் வகையில்தான், ‘தான் யாருக்கு வாக்களித்தார்’ என்பதை தெரியப்படுத்தும் வகையில், சஜித் பிரேமதாஸ தனது வாக்குச் சீட்டை உயர்த்திக் காட்டினார்.

அப்படி அவர் காட்டியதற்கு அர்த்தம்; “போங்கடா நீங்களும் உங்க ரசியசியமும்” என்பதாகவே தெரிந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்