‘பூனை’யும் ‘எலி’களும்; அட்டாளைச்சேனையில் நடந்த மு.காவின் ஆர்ப்பாட்டம்: ஹக்கீமின் ‘கல்குலேட்டர்’ சொல்லும் கதை என்ன?

🕔 April 2, 2022

– முகம்மது தம்பி மரைக்கார் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அட்டாளைச்சேனையில் நேற்று (01) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றியளிக்கவில்லை. மாவட்டம் தழுவிய ரீதியில் கட்சி ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி பெரும் முன்னெடுப்பில் இந்த நிகழ்வை நடத்துவதற்கு, மு.கா. தலைவரே அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருந்த நிலையில், அவர்கள் எதிர்ப்பார்த்தளவு ஆட்கள் வந்து சேரவில்லை.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று – இந்த நிகழ்வுக்கு பெருமளவில் ஆட்களைத் திரட்டி வர வேண்டுமென தனது கட்சிப் பிரமுகர்களுக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், அவ்வாறு ஆட்கள் திரளவில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பல பிரமுகர்கள்; ‘கட்சித் தலைவர் சொல்லி விட்டாரே’ என்பதற்காக, வெறும் ‘பத்துப் பதினைந்து’ ஆதரவாளர்களுடன் வந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுவர்களுடன் வந்தவர்கள்

குறிப்பாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி றக்கீப், பத்துக்கு உட்பட்ட நபர்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையைக் காண முடிந்தது. ஒவ்வொரு ஊரிலிருந்து வந்த பிரமுகர்களும் அவர்களின் ஆட்களுடன் – இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த வகையில் றகீப் குழுவினருக்கு முன்னால் – இரண்டு சிறுவர்கள் பதாதைகளைச் சுமந்தவாறு சென்றனர்.

சிறுவர்களை ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தியமை குறித்து இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர், றகீப் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.

சம்மாந்துறையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கணிசமானளவு ஆட்களைத் திரட்டி வந்திருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சில மாட்டு வண்டில்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த இடத்தில் வைத்து – அந்த மாட்டு வண்டியில் சில பிரமுகர்கள் ஏறியபோது, வண்டி கவிழ்ந்தது. அதனால் ஏறிய பிரமுகர்கள் கீழே விழுந்து விட்டனர். ஆனாலும் யாருக்கும் காயமில்லை.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் மு.கா.வுடன் ஒரு காலத்தில் முரண்பட்டுத் திரிந்தவரும், ‘யாரோ தனக்கு வசிய மருந்து தடவி விட்டமைதான்’ தன்னுடைய அரசியல் தடுமாற்றத்துக்குக் காரணம் எனவும் சொல்லித் திரிந்த சிராஸ் மீராசாஹிப், மீண்டும் மு.காவில் இணைந்துள்ள நிலையில், அவரும் பெண்கள் சகிதம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

நடிகர் ஒருவரின் திரைப்படம் வெளியாகும் போது காட்சிப்படுத்தப்படும் ‘பெனர்’ (Banner) கள் போல், சிராஸ் மீராசஹிப் தரப்பு கொண்டு வந்த ‘பெனர்’கள் காணப்பட்டன. ‘ஸ்டைல்’ஆக ‘போஸ்’ கொடுக்கும் சிராஸின் படங்கள்தான் பெனர்கள் முழுக்கக் காணப்பட்டன.

குடைசாய்ந்த ஹரீஸ்

மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பாக்கப்பட்டமை போலவே, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் நிகழ்வுக்கு முந்தைய அன்று இரவு ஹரீஸ் எம்.பி சற்றே குடைசாய்ந்திருந்தார். ‘இந்த நிகழ்வு நடத்துவதிலும் தப்பில்லை, அதேபோல அரசாங்கத்துடன் பேசி – நாங்கள் சில தீர்வுகளையும் சமூகத்துக்குப் பெற்றுத் தந்துள்ளோம்’ எனத் தெரிவித்து, ஹரீஸ் அறிக்கையொன்றினை, நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவு வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்த பலரும், நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஹரீஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்த்திருந்தனர். ஹரீஸ் வந்தால் அவரை அவமானப்படுத்தவும் கட்சிக்காரர்கள் சிலர் காத்திருந்தனர்.

ஆனால், இந்த மனநிலை மு.கா. தலைவருக்கு இருக்கவில்லை. நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல், நேற்றைய ஆர்ப்பாட்ட நிகழ்வானது, ஹக்கீம் கணக்கில் ஒரு எடைபோடல்தான். அதிக சனத் திரள் வந்தால், அரசாங்கத்தக்கு ஆதரவளிக்கும் அம்பாறை மாவட்ட எம்.பிமாரை எதிர்த்து நிற்பது. கூட்டம் களைகட்டவில்லை என்றால், எம்.பிமாரை பகைக்காமல் பார்த்துக் கொள்ளவது என்பதுதான் ஹக்கீமுடைய கணக்காகும்.

அந்த வகையில், நேற்று நடந்த கூட்டமானது ஹக்கீமுடைய கணக்கில் தோல்வியாகும். அதனை, ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடந்த கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

ஹக்கீமின் ‘கல்குலோட்டர்’

ஹக்கீமுக்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றினார். அதன் பிறகு உரையாற்றிய ஹக்கீம்; தனது கட்சி எம்.பிமாருக்கு ஏசி விட வேண்டாம் என, சாணக்கியனிடம் தான் கூறியதாகச் சொன்னார். அதேபோன்று, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தனது எம்.பிமாருக்கு கால அவகாசம் வழங்கப் போவதாகவும் கூறினார்.

அதாவது தனது கட்சி எம்.பிமாரை நேற்றைய கூட்டத்தில் பகைத்துப் பேச, ஹக்கீம் விரும்பவில்லை. காரணம், நேற்றைய ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்திருந்தது. இப்படி ‘காற்றுப்போன’ ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய கட்சியின் உள்ளுர் ஆசாமிகளை வைத்துக் கொண்டு, தனது கட்சியின் எம்.பிமாரைப் பகைப்பது சாதுரியமல்ல என்பது, ஹக்கீமுக்குத் தெரியாதா என்ன?

இது இவ்வாறிருக்க நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல உபசாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இலவச எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட சில துண்டுகள் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையை நீங்களும் கண்டிருக்கலாம்.

இதேவேளை, மு.காங்கிரஸின் ‘கோட்டை’ என்று, அந்தக் கட்சியினரால் சொல்லப்படும் அட்டாளைச்சேனையில் நடந்த நேற்றைய ஆர்ப்பாட்டத்தை, அந்த ஊரவர்களில் பெரும்பாலானோர் வீதியோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையையும் காண முடிந்தது.

உண்மையாகவே, நேற்று நடந்தது அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமல்ல என்பதை, ஆர்ப்பாட்டத்துக்கு முன்னராகவே மக்கள் புரிந்து வைத்திருந்தனர்.

எலிக்கு மரணம் – பூனைக்கு விளையாட்டு என்பார்களல்லவா? நேற்றைய கூட்டத்தில் பூனை – ஹக்கீம். மக்கள்தான் எலி என்பதை புரியாதளவுக்கு நாம் முட்டாள்களா என்ன?

தொடர்பான கட்டுரை: ஹக்கீமின் அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து

Comments

புதிது பேஸ்புக் பக்கம்