ஹக்கீமின் அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து

🕔 March 27, 2022

– முகம்மது தம்பி மரைக்கார் –

நாடு கிட்டத்தட்ட வங்குரோத்து நிலைக்கு மிக அருகில் உள்ளது. விரக்தியும், கோபமும் கொண்ட மனநிலையுடன் மக்கள் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களை ஊடகங்கள் முன்பாக – கெட்ட வார்த்தைகளில் சிங்கள மக்களே திட்டித் தீர்க்கின்றனர். அவர்களில் தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் உள்ளனர் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலையில் அரசாங்கம் கடுமையாக ஆட்டங்கண்டுள்ளது. ‘மேற்கு நாடுகளிடம் செல்வாக்குள்ள ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்’ என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் சர்வதேச ஊடமொன்றிடம் கூறியிருக்கிறார். இன்னும் 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று – பலரும் எண்ணியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், இரண்டு வருடங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றினை எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகிறது.

இடைவெளியில் ‘கடா’ வெட்டப் பார்க்கிறாரா ஹக்கீம்?

தாம் கொண்டு வந்த அரசாங்கத்துக்கு எதிராக, சிங்கள மக்களே போர்க் கொடி தூக்கிவரும் நிலையில், ‘கிடைக்கின்ற இடைவெளியில் கடா வெட்டும்’ இந்த வேலையை முஸ்லிம் காங்கிரஸ் ஏன் செய்யப் போகிறது என்கிற கேள்வியும் சந்தேகமும் பலரிடமும் உள்ளது.

கொரோனாவினால் மரணித்த முஸ்லிம் பிஞ்சுக் குழந்தைகளை எரித்த போது முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைவருக்கும் செய்வதற்கு தோன்றாத ஆர்ப்பாட்டம், இப்போது ஏன் என்கிற கேள்வியில் நியாயங்கள் நிறையவே உள்ளன.

ஆகக்குறைந்தது திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் அதன் ஆசிரியை ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போடுவதற்கு வக்கற்றிருந்த ரஊப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸும் இப்போது ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது என்கிற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர்.

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமானால், அதனை மு.கா. தலைவர் ஹக்கீம் அவரின் கண்டி மாவட்டத்தில் செய்து காட்டலாமே என்கின்றனர் இன்னுமொரு தரப்பினர்.

தாழி உடைக்கும் வேலை

முஸ்லிம் மக்களை தனியாகத் திரட்டி, சிங்கள மக்களால் கொண்டுவரப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டமென்பது, ‘எண் ணெய் திரண்டுவரும் போது, தாழியை உடைப்பதற்கு ஒப்பானதாகும்’ என்பது புத்தி ஜீவிகளின் கருத்தாக உள்ளது. சிங்கள மக்களே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக திரளும் போது, சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் கைகோர்ப்பதுதான் சாதுரியமான நடவடிக்கையாக இருக்கும். அல்லது தற்போதைய அரசியல் அரங்கில் முஸ்லிம்கள் பார்வையாளர்களாக இருப்பதும் புத்திசாலித்தனமானதாகும்.

அதைவிடுத்து, கோட்டா அரசாங்கத்துக்கு எதிராக – முஸ்லிம்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி, அதன் மூலம் மீண்டும் சிங்கள மக்களை, கோட்டாவுக்கு ஆதரவாகச் சிந்திக்கும்படியான வேலையைத்தான் ரஊப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸும் செய்யப் போகிறதா? என்கிற எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

‘அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ எனும் பெயரில் அட்டாளைச்சேனையில் எதிர்வரும் முதலாம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் பெயரில்- ஹக்கீம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தின் தேவை மற்றும் பின்னணி என்ன என்பதை மக்கள் விளங்கிக் கொள்தல் வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு அதன் தலைவர் ஹக்கீமுடன் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஹக்கீம் தவிர ஏனைய நால்வரும் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிகாரத்தை எடைபோட்டுப் பார்க்கும் முயற்சி

இந்தப் பின்னணியில்தான் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீம் நடத்தப்போகிறார். இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றால், ‘அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்கள் இல்லை’ என தம்பட்டம் அடிப்பது அல்லது அந்த எம்.பிமார்களை ஒதுக்குவது ஹக்கீமுடைய திட்டமாகும்.

சிலவேளை எதிர்பார்த்த வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் வெற்றிபெறாது விட்டால், அரசாங்கத்துடன் இணைந்துள்ள மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அரசியலை முன்கொண்டு செல்வது ஹக்கீமுடைய அடுத்த திட்டமாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதற்குரிய பிரதான பொறுப்பாளராக அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி வந்து – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்துள்ள போதும், அவருக்கு இதுவரை முக்கிய பொறுப்புகள் எவையும் கட்சிக்குள் கொடுக்கப்படவில்லை. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமானதாக்கி, அதன் மூலம் ஹக்கீமுடைய மனதை வென்று, கட்சிக்குள் நல்லதொரு பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் உதுமாலெப்பைக்கு உள்ளது.

அட்டாளைச்சேனை ஏன் தெரிவு செய்யப்பட்டது?

மேற்படி ஆர்ப்பாட்டத்தை அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய ஊர்களில் செய்யாமல், அட்டளைச்சேனையில் நடத்துவதற்கு ஏன் தீர்மானிக்கப்பட்டது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கல்முனை பிரதேசமானது அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஹரீஸ் எம்.பியின் சொந்த இடமாகும். நிந்தவூர் – மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பைசால் காசிமுடைய ஊராகும். எனவே அங்கு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது. பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய ஊர்களில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சம்மாந்துறை – முஸ்லிம்காங்கிரஸுக்கு எதிரான பிரதேச சபைத் தவிசாளரைக் கொண்ட ஊராகும்.

எனவே அட்டாளைச்சேனைதான் இந்த நடவடிக்கைக்குப் பொருத்தமான ஊராகும். இங்குள்ள பிரதேச சபையும் முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆக, மேற்படி ஆர்ப்பாட்டத்தை நடத்துவற்கு ஹக்கீமுக்கு சாதகமான இடம் அட்டாளைச்சேனைதான்.

இதன்படி பார்த்தால், மு.கா. தலைவர் தனக்குள்ள அரசியல் அதிகாரத்தை எடைபோட்டுப் பார்ப்பதற்காக, முஸ்லிம் சமூகத்தையும் அட்டாளைச்சேனை பிரதேசத்தையும் பகடைக் காய்களாக எதிர்வரும் 01ஆம் திகதி பயன்படுத்தப் போகிறார் என்பது தெளிவாகிறது.

ஹக்கீமுடைய அதிகாரப் பசிக்கு நாம் ஏன் பலியாக வேண்டும் என்பதுதான் இங்குள்ள பெருங்கேள்வியாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்