அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் நாலரை லட்சம் கிலோகிராம் பசளை கையளிப்பு

🕔 March 31, 2022

– மப்றூக் –

ட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள பாரிய குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட 04 லட்சத்து 40 ஆயிரம் கிலோகிராம் சேதனப் பசளை, தேசிய உர செயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (30) மாலை இடம்பெற்றது.

குப்பைமேடு அமைந்துள்ள வளாகத்தில் இயங்கும் – பசளை தயாரிக்கும் தொழிற்சாலையில் வைத்து, தேசிய உர செயலகத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான மேலதிக பணிப்பாளர் ஏ.எம். பிரியந்த பண்டாரவிடம், பசளையினை தயாரித்து வரும் – தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் அருண கடுருபொகுண மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ஆகியோர் இணைந்து இந்த பசளையினை வழங்கி வைத்தனர்

அஷ்ரப் நகர் பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழுள்ள 09 ஏக்கர் இடப்பரப்பில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு உள்ளுராட்சி சபை பிரதேசங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகள், காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.

இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபை – ஒரு தொன் குப்பைக்கு 250 ரூபா வீதம் அறவிடுகின்றது.

தினமும் இங்கு சுமார் 150 தொன் குப்பைகள் கொட்டப்படுவதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவிக்கின்றார்.

இங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து இயற்சை உரம் தயாரிப்பதற்காக, அந்த வளாகத்தில் 220 மில்லியன் ரூபபா செலவில் தொழிற்சாலையொன்றினை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அரசு அமைத்துக் கொடுத்தது.

இந்த நிலையில், இங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பொருட்டு, இந்த தொழிற்சாலையினை கடந்த வருடம், தனியார் நிறுவனமொன்றுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை வாடகை அடிப்படையில் வழங்கியது.

இதனடிப்படையில் இங்கு தயாரிக்கப்பட்ட 04 லட்சத்து 40 ஆயிரம் கிலோகிராம் சேதனப் பசளை, நேற்று தேசிய உர செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி உள்ளிட்ட மேலும் சிலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்