வானொலி அரச விருது விழா: தொடரும் முறைகேடுகள்

🕔 March 23, 2022

ரச வானொலி விருது வழங்கலில் – பாரிய முறைகேடுகள் உள்ளன என்று, மூத்த ஊடகவியலாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரியுமான யூ.எல். யாக்கூப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வானொலி விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நடுவர் குழுவில் உள்ளவர்கள் முட்டாள்தனமான முடிவுடன் செயல்படுவது, தான்தோன்றித்தனமானதும் நாகரிக ஊடக கலாசாரத்துக்கு சவால் விடுப்பதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அரச விருதுகளில் தொடரும் முறைகேடுகள்’ எனும் தலைப்பில், அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

‘அங்கீகாரம்’ என்பதன் இன்னுமொரு வடிவமே ‘விருதுகள்’ என்ற தோரணையில், பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்டவர்களுக்கு ‘சாதனையாளர்கள்’ என்ற மகுடத்துடன், அரச மற்றும் தனியார் அமைப்புகளால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நூற்றுக்கணக்கான துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்ற போதிலும், ஊடகத் துறையிலும் பல்வேறு கோணங்களில் திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அரச விருது, ஜனாதிபதி விருது என்று அவை வழங்கப்படுகின்றன. யாருக்கு விருது வழங்கப்படுகின்றது என்பதில்தான் அந்த விருது கௌரவமும், மேன்மையும்,பெருமையும் அடைகின்றது.

அவ்வாறானால் அந்த விருதுக்குரியவர் உயர்ந்தபட்ச திறமைகளை, குறித்த துறையில் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஒலி, ஒளிபரப்பாளருக்கு ஒரு விருது வழங்கப்படுமாயின் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருது பொருத்தமா? இல்லையா? என்பதை, பொதுமக்கள் தீர்மானித்து விடுகிறார்கள். ஏனென்றால் மக்கள் தினமும் இவர்களின் பங்களிப்பை வானலை வழியே கேட்டுக் கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

காக்காய் பிடித்து வாங்கும் விருதை, மக்கள் கண்டு பிடித்து விடுவார்கள்

ஒரு ஒலி, ஒளிபரப்பாளர் குறித்து நமது நேயர்களின் (பொதுமக்கள்) நெஞ்சத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிவரும் நல்லபிப்பிராயமும் மரியாதையும்,பாராட்டும், கௌரவமுமே உண்மையான உயர்தகு விருது ஆகும். அதை விட பெரிய விருதுகள் கிடையாது. வானொலி அல்லது தொலைக்காட்சியில் பங்களிப்புச் செய்யும் ஒருவரின் திறமையும் ஆளுமையும் பொதுமக்களால் மிக இலகுவாக தீர்மானிக்கப்பட்டு மிகச்சரியான அங்கீகாரமும் கிடைத்து விடுகின்றது.

மக்களின் அதிருப்திக்குள்ளான அல்லது வெறுப்புக்குள்ளான ஒருவருக்கு பெறுமதியான விருது ஒன்று வழங்கப்படுமாயின், அது நியாயமான தீர்ப்பு அல்ல என்பதற்கு அப்பால், பாரபட்சமான முறையில் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது பின்னால் இரந்து காக்காய் பிடித்தல் அல்லது முகஸ்துதி பாடுதல் அல்லது ஏதோ ஒரு வழியில் நடுவரை திருப்திப்படுத்துதல் என்பன காரணமாக இந்த விருது வழங்கப்படுகிறது என்ற முடிவுக்கும் பொதுமக்கள் மிக இலகுவாக வந்து விடுகின்றார்கள்.

விருது வழங்கும் நடைமுறையில் – விருதுகளுக்கு உரியவர்களை தீர்மானிக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சக்தியாக இருப்பது நடுவர் குழுவே ஆகும். இந்த நடுவர் குழுவில் இருக்கவேண்டிய தகுதியானவர்கள் யார்? அவர்களது பணி என்ன? என்பது மிக ஆழமாக நோக்கப்பட வேண்டிய பாரதூரமான ஒரு விடயமாகும். அத்துடன் மிகப்பொறுப்பு வாய்ந்த ஒரு பணியுமாகும்.

ஆனால் இந்த விடயம் பல்வேறு மட்டங்களில் கடும் சலசலப்பையும் ஆக்ரோஷமான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. நடுவர் குழாம் என்பவர்கள் – மக்களின் பிரதிநிதிகளாகவும் நீதிபதிகள் போன்றும் செயற்பட வேண்டியவர்கள். அத்துடன் குறித்த துறை குறித்து ஆழமான அறிவும் அனுபவமும் அவர்களுக்கு இருக்க வேண்டும். நீதி, நியாயம்,நேர்மை என்பவற்றின் அச்சாணியாக நடுவர்கள் திகழ வேண்டும்.

குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அல்லது விண்ணப்பத்தாரிகள் பணியாற்றும் துறைசார் நிறுவனங்களில் பணிபுரியாத அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பு இல்லாதவர்களாக நடுவர்கள் இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீதிக்காக நேர்மைக்காக மனச்சாட்சிப்படி துணிச்சலுடன் செயல்பட்டு முடிவுகள் எடுக்கக்கூடிய தைரியசாலிகளாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.

ஒரு தகுதிவாய்ந்த திறமைசாலி ஓரங்கட்டப்பட்டு, தகுதியற்ற ஒருவரை தெரிவு செய்யும் முடிவானது, அந்த திறமைசாலியின் பங்களிப்பு, உழைப்பு, திறமை, அனுபவம், எதிர்பார்ப்பு மற்றும் அவரது எதிர்காலம் அனைத்தையும் பாதணிக்கு கீழே போட்டு நசுக்கி விட்டு, தனக்கு தெரிந்த அல்லது வேறு சிபாரிசுகளின் மூலம் ஒருவரை தெரிவு செய்து விருது வழங்குவது என்பது, இறை நீதிக்கு சவால்விடும் அபாயகரமான தீர்மானமாகும்.

இலங்கையில் கடந்த சில காலமாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் வானொலி மற்றும் தொலைக்காட்சி அரச விருது விழா நிகழ்வுகளில் மிகக் கடுமையான பாரபட்சங்கள் இடம்பெற்று வருகின்றன என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பல ஊடகவியலாளர்கள், ஒலிபரப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் கடும் அதிர்ச்சியிலும் விசனத்திலும் ஏமாற்றத்திலும் துவண்டுபோய் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருவது வேதனைக்குரியதாகும்.

திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ‘வானொலி அரச விருது விழா 2022’ இல், நடுவர்களாக பணிபுரிந்த நால்வர் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

நடுவர்கள் பொருத்தமானவர்கள்தானா?

  1. மயில்வாகனம் சர்வானந்தா: இவர் குறித்த நடுவர் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர். ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓய்வுபெற்ற போதிலும் ‘சிறுவர் மலர்’ என்ற சிறுவர் நிகழ்ச்சி ஒன்றில், இன்னும் தொகுப்பாளராக கடமையாற்றுகின்றார்.
  2. ஆர். சந்திரமோகன்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற போதிலும், செய்தி அறிவிப்பாளராக பிரதான செய்தி அறிக்கைகளை வாசித்து வருகின்றார். அத்துடன் CIR எனும் கொழும்பு சர்வதேச வானொலியில் அறிவிப்பாளராகவும் பணிபுரிகின்றார். செய்தியும் வாசித்துக்கொண்டு சிறந்த செய்தி வாசிப்பாளர்களையும் அவரே தெரிவும் செய்கின்றார். இது ஒரு புதிய வேடிக்கையான நடைமுறை போன்று தெரிகிறது.
  3. மஹ்தி ஹஸன் இப்ராகிம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ‘சஞ்சாரம்’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குரல் கொடுத்து வருகின்றார். அதுபோல் பல வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளுக்கு பிரதிகளும் எழுதி வருகின்றார்.
  4. ஜி போல் அண்டனி: இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக மட்டுமே கடமையாற்றிய ஒருவர். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஓர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எந்த அடிப்படையில் இவர் இந்த நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

இவர்கள் இவ்வாறு இந்த நிறுவனத்தில் நேரடியாக பங்களிப்புச் செய்து, கலைஞர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் இருந்துகொண்டு, அதே நிறுவனத்தில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் ஆக்கங்களையும், வெளியே தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களிலிருந்து விண்ணப்பிக்கும் போட்டியாளர்களின் ஆக்கங்களையும் எவ்வாறு மனச்சாட்சிப்படி தரம் பிரிக்க முடியும்?

விதிகள் மீறப்பட்டுள்ளன

பல உள்ளூர் மற்றும் சர்வதேச விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் மீறிச் செயற்படும் இவர்கள், இந்தக் குழுவில் இருந்து நடுவர்களாக செயற்படுவதற்கு தகுதியானவர்கள் தானா? என்ற கேள்வி இன்று பல மட்டங்களிலும் பரவலாக கேட்கப்படுகின்றது.

கடந்த வருடங்களிலும் இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாயின. இவர்களால் இதுவரை தெரிவு செய்யப்பட்டவர்களின் திருப்தியை விடவும், இவர்களால் நிராகரிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட திறமைசாலிகளின் பெருமூச்சும் சாபங்களும் இவர்களை சும்மா விடாது.

நடுவர்கள் என்று நினைப்பவர்கள் எது வரைக்கும் எது வேண்டுமானாலும் செய்யலாம். எத்தகைய முடிவும் எடுக்கலாம் என்ற மனநிலையில் இருப்பதுதான் சிறுப்பிள்ளைத்தனம். அதிகாரம் கையில் இருந்தால் – தான் விரும்பியவரை உயர்த்தலாம், தான் வெறுப்பவரை தாழ்த்தலாம் என்ற விபரீதமான முட்டாள்தனமான முடிவுடன் நடுவர்கள் செயல்படுவது – தான்தோன்றித்தனமானதும் நாகரிக ஊடக கலாச்சாரத்துக்கு விடுக்கப்படும் சவாலும் ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்