இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு

🕔 February 21, 2022

– தம்பி –

லங்கை ஒலிபரக்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு, பகுதி நேர அறிவிப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) , ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட விவரங்களை – வழங்க முடியாது என, அந்த நிறுவனத்தின் தமிழ் சேவை பதில் பணிப்பாளர் கே. நாகபூசணி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் றிப்தி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே, ‘தகவல்களை வழங்க முடியாது’ என நாகபூசணி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் றிப்தி அலி அனுப்பி வைத்த விண்ணப்பத்தில், சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு தொடர்பாக 15 கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைக் கோரியிருந்தார். ஆனால், அவற்றில் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் வழங்கியுள்ள நாகபூசணி, ஏனைய 13 கேள்விகளுக்கும் தகவல்களை வழங்க முடியாது என பதிலளித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் றிப்தி அலி கோரியுள்ள தகவல்கள் – பொதுநலன் சாராதவை என்றும், அவை சுயநலம் சார்ந்தவை எனவும் குறிப்பிட்டுள்ள நாகபூசணி; அதனால் அவற்றுக்குப் பதில் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி குரல் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தக் குரல் தேர்தலில் – தமிழ் சேவை அறிவிப்பாளர் நாகபூசணியின் சகோதரருடைய மகன் மற்றும் அறிவிப்பாளர் சீத்தா ராமனின் மகன் உள்ளிட்டோர், பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், ‘பின்வழியாக’ குரல் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விதிமுறைக்கு மாறாக ‘பின்வழியால்’ அழைக்கப்பட்டவர்களுக்கான குரல் தேர்வை நடத்திய நடுவர் குழுவில், அறிவிப்பாளர்களான நாகபூசணி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்த மோசடியான ஆட்சேர்ப்பு முயற்சி குறித்து ‘புதிது’ செய்தித்தளம் கடந்த மாதம் 05ஆம் திகதி செய்தியொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மேற்படி ஆட்சேர்ப்பு தொடர்பில் விவரங்களைக் கோரி, ஊடகவியலாளர் றிப்தி அலி உட்பட, இலங்கை ஒலிபரப்புக் கூடடுத்தாபனத்தில் பணியாற்றும் சிலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

திருடர் கையில் சாவியா?

ஆனால், ‘திருடர் கையில் சாவி கொடுக்கப்பட்டது போல்’, நாகபூசணி தரப்பு மேற்கொண்ட மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு, நாகபூசணியிடமே வழங்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும் என, இது தொடர்பில் அறிந்தோர் கூறுகின்றனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உறவினர்களை பின்வழியால், அல்லது சட்டத்துக்கு முரணாக அறிவிப்பாளர்களாக்கும் முயற்சிகளை மேற்கொள்வது நாகபூசணிக்கு இது முதல் தடவையல்ல.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இவரின் அண்ணன் மகள் உள்ளிட்ட சிலரை, ஒப்பந்த அறிவிப்பாளராகத் தெரிவு செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது, நடுவர் குழுவில் நாகபூசணி இருந்து, தனது அண்ணன் மகளைத் தெரிவுசெய்திருந்தார்.

அந்த தெரிவுக்கு எதிராக – உச்ச நீதிமன்றில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர அறிவிப்பாளர்கள் இருவர் அப்போது தாக்கல் செய்த மனுவில்; அண்ணன் மகளைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் நாகபூசணி இடம்பெற்றிருந்தமை பற்றி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தான் அனுப்பி வைத்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது என நாகபூசணியிடமிருந்து பதில் கிடைக்கப் பெற்றமையை அடுத்து, இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் றிப்தி அலி, ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம்

Comments