சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

🕔 February 21, 2022

– எம்.எப்.எம். பஸீர் –

யிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருங்கிய சகாவான ‘ குட்டி சஹ்ரான்’ அல்லது மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவுச் சேவையின் அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தமை வெளிப்பட்டிருந்தது. ‘ சொனிக் சொனிக் ‘ எனும் பெயரால் அறியப்பட்ட குறித்த அரச உளவுச் சேவை அதிகாரி தொடர்பில் கூடுதல் தகவல்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பீ (B) அறிக்கையின் பிரகாரம் தான் கைது செய்யப்படுவதையும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதையும் தடுத்து உத்தரவிடுவதுடன் தனக்கு 10 கோடி ரூபாவை நட்டஈடாக செலுத்த உத்தரவிடுமாறும்கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 36 பக்க அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக இந்த கூடுதல் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, அத்திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரண விசேட பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா உள்ளிட்ட 14 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கமைய, சொனிக் சொனிக் எனும் பெயரால் அறியப்படும் அரச உளவுச் சேவை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பண்டார என்பவராவார். அமெரிக்கவின் எப்.பி.ஐ. விசாரணையாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தொலைபேசி கட்டமைப்பு மற்றும் ஐபி (IP) முகவரிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய கண்டறியப்பட்ட சிம் அட்டை ஒன்றை மையப்படுத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

குறித்த சிம் அட்டையின் பதிவு தொடர்பில் விசாரித்தபோது, அது கொழும்பு நகர போக்குவரத்து பிரிவின் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பெயரில் இருந்ததாகவும் அவரை விசாரித்தபோது, அந்த சிம் அட்டை தன்னுடன் தொடர்பில் இருக்கும் உளவுச் சேவை அதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் பண்டாரவுக்கு தான் பெற்றுக்கொடுத்தது எனவும் தெரிவித்ததாக முன்னாள் சிஐடி பனிப்பாளர் ஷானி அபேசேகர தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது உப பொலிஸ் பரிசோதகர் பண்டாரவை தான் விசாரிக்க முயன்றதாகவும், அப்போது அரச உளவுச் சேவையின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த சம்பத் லியனகே, அவரை விசாரிக்க வேண்டாம் எனவும் அது உளவுத்துறையின் திட்டப்படி முன்னெடுக்கப்பட்ட தொடர்பாடல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் அக்கோரிக்கையை தான் நிராகரித்து உப பொலிஸ் பரிசோதகர் பண்டாரவை விசாரணை செய்ததாகவும், அவர் எந்த விடயத்தையும் வெளிப்படுத்த மறுத்ததாகவும் ஷானி அபேசேகர மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தாக்குதலுக்கான பொறுப்பை சர்வதேச பயங்கரவாத குழுவான ஐஎஸ்ஐஎஸ் ஏற்பதற்கான கோரிக்கை இந்த மாத்தளை ஸஹ்ரான் எனும் சந்தேக நபராலேயே முன் வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்டுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்