தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

🕔 February 20, 2022

– அஹமட் –

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.

ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப் பதவி வகித்த எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் அவரின் புதல்வர் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் சக்கி அதாஉல்லா ஆகியோருடன் சில காலமாக சபீஸ் முரண்பட்டு வந்த நிலையிலேயே, தேசிய காங்கிரஸின் மாநாட்டுக்கு சபீஸ் அழைக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய சபீஸ்; “அரசியல் ரீதியாக கிழக்கு மாகாணத்துக்குத் தலைமை தாங்கும் தகைமை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸுக்கு உள்ளது” எனத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் ‘கிழக்கின் கேடயம்’ எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பொன்றில், சபீஸ் முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றமையினையும் காணக் கூடியதாகவுள்ளது.

தேசிய காங்கிரஸில் இனி சபீஸுக்கு இடமில்லை என்பதையே, இன்றைய மாநாட்டுக்கு அவர் அழைக்கப்படாமையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என, தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ”இன்றைய மாநாட்டுக்கு உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் அழைக்கவில்லையே, இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என, சபீஸிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது; “அதற்கான பதிலை தேசிய காங்கிரஸ் தலைவரிடம்தான் கேட்டக வேண்டும்” என, சபீஸ் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகப் பதவி வகித்து வந்த சபீஸ், இன்றைய தினம் உயர்பீட உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை என்பதோடு, அவர் வகித்த தேசிய இணைப்பாளர் பதவியும், வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்