பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

🕔 February 17, 2022

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேச நாணயகார ஆகியோர் தலைமை வகிக்கும் கட்சிகள் உட்பட, பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகள் மற்றும் சுந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களின் இணைவுடன் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இருந்தபோதும் இந்தக் கூட்டணி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் எனவும் கூறப்படுகிறது.

இந் நிலைமையானது, தற்போதைய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பதாகவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரசியல் கூட்டணி குறித்த அறிவிப்பு – மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரியவருகிறது.

கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் கலந்து கொள்ளாமையின் மூலம், அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டமை மிகவும் தெளிவாகத் தெரிவதாகவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியினால் தாம் நடத்தப்பட்ட விதம் குறித்து அரசாங்க தரப்பில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவலைகளையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்து செயல்படும் அதேவேளை, தனியான கூட்டணியில் இணையவுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர், மற்றொரு அரசியல் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை, சஜித் பிரேமதாஸவிடம் சம்பிக்க ரணவக்க கேட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளதோடு, அதற்கு சஜித் இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை சம்பிக்க ரணவக்க மறுக்கவில்லை. ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க மற்றும் வெல்கமவுடன் பொதுக் கூட்டணியை உருவாக்குவது குறித்து சம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்