இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து: வெளியானது விவரம்

🕔 February 18, 2022

லங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், தெமட்டகொட ருவானிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.

ருவன் சமில பிரசன்ன எனும் இயற்பெயர் கொண்ட தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி 790 மில்லியன் ரூபா எனவும் சிஐடி தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 2011ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதன் பின்னர் சட்டவிரோத வியாபாரத்தை ஆரம்பித்து 2017ஆம் ஆண்டு தொடக்கம் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

90 மில்லியன் ரூபா பெறுமதியான 09 அதி சொகுசு வாகனங்கள் உட்பட கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், அரச சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று நிலையான வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 90 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், 20 மில்லியன் ரூபா பெறுமதியான 1.5 கிலோ தங்கம் மற்றும் 160 மில்லியன் பெறுமதியான 03 காணித்துண்டுகளும் பொலிஸாராால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேக நபர் – தனக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி சிஐடி அதிகாரிகளுக்கு 50 மில்லியன் ரூபா பணத்தை வழங்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, வெலே சுதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களே, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய பெறுமதியுடைய சொத்துகளாக கருதப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல குற்றவாளியான ‘தெமட்டகொட சமிந்த’வின் சகோதரரே, தெமட்டகொட ருவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்