ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

🕔 February 11, 2022

வுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டதையடுத்து, பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டது. இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பம்மடுவ ராணுவ முகாமுக்கு அருகில் பொலிஸ் மற்றும் ராணுவத்தினரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றிய காலப்பகுதியில், தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறிய காணாமல் போனவர்களின் உறவினர்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை – பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டமையை அடுத்து, அவர்கள் பம்மடுவ ராணுவ முகாமிற்கு அருகில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் இரண்டு பேருக்கு மட்டும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரும் முன்வந்தபோதும், அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் உடன்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்