பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

🕔 January 20, 2022

– அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (22ஆம் திகதி) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் சேவையில் கூடிய தரத்தைக் கொண்ட பல ஆசிரியர்களுக்கு மேற்படி பரீட்சைக்கான மேற்பார்வையாளர் பொறுப்புகள் வழங்கப்படாமல், குறைந்த தரங்களையுடைய ஆசிரியர்கள் – மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என புகார் தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஆசிரியர் சேவையில் தரம் – I நிலையைக் கொண்ட பல ஆசிரியர்கள் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படாமல், தரம் 02 -I, 02 -II நிலைகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் பலர், ஆசிரியர் சேவையில் உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே, கூடிய தரத்தையுடைய ஆசிரியர்களுக்கு இவ்வாறு ‘வெட்டு’ விழுந்துள்ளதாகவும், ஆசிரியர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னைய பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் மௌலவி காலத்தில், பரீட்சை மேற்பார்வையாளர்கள் – ஆசிரியர் சேவையின் உயந்ந்த தரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போதைய பணிப்பாளர் பதவிக்கு வந்த பிறகு, அந்த நிலைமை – தலைகீழாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மேற்பார்வையாளர் நியமனத்திலும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இவ்வாறு பாகுபாடான முறையில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் ஒருவரே, இவற்றுக்கு முக்கிய காரணம் எனவும், ஆசிரியர்கள் விரல் நீட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்