அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

🕔 December 21, 2021

– பாறுக் ஷிஹான் –

ஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போ முன்பாக வைத்து, சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருளுடன் பயணம் செய்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா மற்றும் மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி. வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ்.பி. பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக புலனாய்வு  அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர் அவ்விடத்துக்கு மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்திய அதி சொகுசு கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் இருந்து  13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர்  கைது செய்யப்பட்ட நபரையும், கார் மற்றும் போதை பொருள் ஆகியவற்றினையும் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட நபர் – உள்ளுர் அரசியல்வாதிகள் சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர் எனவும் அறியக் கிடைக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்