அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர்

🕔 November 30, 2021

– பாறுக் ஷிஹான் –

வைத்தியர்கர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்திக் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் வேலைகளில், அந்த வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் ஈடுபட்டு வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு – கல்முனை பிராந்திய உறுப்பினர் டொக்டர் ஏ.எம். சுஹைல் குற்றஞ்சாட்டினார்.

இவ்விடயத்தில் தீர்வுகள் கிடைக்கவில்லையென்றால், தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகராகக் கடமையாற்றிய நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டு, தற்போது கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்ற டொக்டர் ஜவாஹிர்; அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சில ஊழியர்களையும் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் சிலரையும் தன் வசப்படுத்தி, வைத்தியசாலையில் நிர்வாகச் சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாகவும் டொக்டர் சுஹைல் குற்றஞ்சாட்டினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது பல நிர்வாக ரீதியான முறைகேடுகளும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளும் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்; இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் தங்களின் சங்க அங்கத்தவர்கள்  பல சந்தர்ப்பங்களில் இது குறித்து தங்களுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் டொக்டர் சுஹைல் குறிப்பிட்டார்.

மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் டொக்டர் ஜவாஹிரின் தூண்டுதலினால் நடைபெறுகின்ற நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்யுமாறு, சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய தாங்கள் ஒன்றிணைந்து – தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அத்தியட்சகராகக் கடமையாற்றிய போது, அவருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையினர் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையும், அதுகுறித்து சுகாதார அமைச்சுக்கு முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுஹைல் உள்ளிட்ட தரப்பினர் மன அழுத்தத்தில் உள்ளனர்: டொக்டர் ஜவாஹிர் தெரிவிப்பு

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகரும், கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் தற்போது அத்தியட்சகராகக் கடமையாற்றி வருகின்றவருமான டொக்டர் ஐ.எம். ஜவாஹிரிடம் ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது; தனக்கெதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் டொக்டர் சுஹைல் உள்ளிட்ட தரப்பினர், கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகராக தான் கடமையாற்றிய காலத்தில் பிரச்சினைகள் உள்ளதாகக் கூறி, தனக்கு எதிராக செயற்பட்ட அதே நபர்கள், தான் அங்கிருந்து வெளியேறி 04 மாதங்கள் கடந்த பின்னரும், தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பிழைப்பு நடத்துவது வெட்கக்கேடான விடயம் எனவும் டொக்டர் ஜவாஹிர் தெரிவித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் டொக்டர் சுஹைல் போன்றோர் – தமக்கு விரும்பியவர்களை நிருவாகத்தில் அமர்த்திய பின்னரும், அங்கு நிர்வாகச் சீர்கேடு உள்ளதாகக் கூறுகின்றமை, அவர்களின் வங்குரோத்து நிலைமையினை வெளிப்படுத்துவதாகவும் டொக்டர் ஜவாஹிர் சுட்டிக்காட்டினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தான் அத்தியட்சகராகக் கடமையாற்றிய போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்றுக் கிளையினர், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்தி, அதனை சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும், அவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதனாலேயே சுகாதார அமைச்சு – அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் டொக்டர் ஜவாஹிர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்