மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

🕔 November 24, 2021

ரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சியின் தீர்மானத்தை புறக்கணித்து நடந்தமைக்காக கட்சியின் தலைவரால் அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களாகவும், பைசல் காசிம் – பிரதி அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தனர்.

தௌபீக் விடயத்தில் பக்கச் சார்பா?

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த உயர்பீடக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், ஹாபிஸ் நசீர் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கட்சி முடிவு செய்திருந்த போதும், அவ்வாறு நடந்து கொள்ளாமல், தௌபீக் – வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டமையானது, கட்சியின் தீர்மானத்துக்கு முரணான செயற்பாடு என்று, கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கூறுகின்றனர்.

இருந்த போதும் தௌபீக் எம்.பியை காப்பாற்றும் வகையில் மு.கா. தலைவர் நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக, கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக தௌபீக் எம்.பி வாக்களித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

தௌபீக் எம்.பியை மு.கா. தலைவர் ஹக்கீம் இவ்வாறு காப்பாற்றுவதற்கு பின்னால், ஓர் உறவு முறை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்பான செய்தி: பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்