வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம்

🕔 October 11, 2021
பி.எஸ்.எம். சார்ல்ஸ்

டக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையென, முன்னைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸுடைய இணைப்பதிகாரி, ஹிரு செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜீவன் தியாகராஜா, இன்று வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இன்று காலை வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது, வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், தாம் வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான எவ்வித கருத்துகளையும் அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் ஹிரு செய்திப்பிரிவிடம் பேசிய வட மாகாண ஆளுநர் சார்ல்ஸ்ஸின் இணைப்பதிகாரி; இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையென கூறியுள்ளார்.

வட மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் செயற்பட்டுவருவதாகவும், அவரின் இணைப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

Comments