நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் வீடு அருகில் ‘வெள்ளை வேன்’: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 October 11, 2021

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன – தனது வீட்டுக்கு அருகில் வெள்ளை வேனில் அடையாளம் தெரியாத குழுவினரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் வியாழக்கிழமை (07) காலை தனது வீட்டின் அருகே வந்ததாகத் தெரிவித்து, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார் என, திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நபரொருவர் வேனில் இருந்து இறங்கி, தனது வீட்டு வாயிலில் உள்ள எண்ணைச் சரிபார்த்ததாக – தன்னிடம் அயலவர் ஒருவர் கூறியதாகவும் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை குறித்து, ஒரு மாதத்துக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) புகாரளித்ததாக கூறிய குணவர்த்தன, இது தொடர்பாக சிஐடி தன்னிடமிருந்து இன்னும் அறிக்கைகள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையில் நடந்து வரும் பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்து துஷான் குணவர்தன சமீபத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். இதனால் அரசுக்கு சொந்தமான சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய ‘வெள்ளைப் பூண்டு ஊழல்’ பற்றிய தகவல் வெளியானது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரின் செயல்பாடுகளின் தொடர்பில், ஊடகங்களிடம் துஷான் குணவர்தன குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்