தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

🕔 October 10, 2021

ன்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவம் நிறுவப்பட்டு 72ஆவது ஆண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.

இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதனை ஏற்றுக்கொள்கிறேன்.

அனைத்து பின்னடைவுகளுக்கும் கொவிட் பெருந்தொற்றுடனான போராட்டமே காரணமாகும். இண்டு ஆண்டுகள் கொவிட் பெருந்தொற்றுடன் போராட நேரிட்டது.

புதிய சக்தியுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் நான் உறுதிமொழி வழங்குகின்றேன். நாட்டை முடக்கியமை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

எனினும், இந்தக் காரணிகளை கூறி நாம் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய இவ்வாறு அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும். நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படாது.

இதற்காக அர்ப்பணிப்புடன் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் ஊழல் மோசடிகளில் இன்றி முன்னோக்கி நகர அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கொவிட் பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பின்னடைவை சந்தித்த போதிலும், இந்தக் காலப் பகுதியில் நாட்டில் பாரியளவு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளது.

உலகின் ராணுவங்கள் போரில் மட்டுமன்றி தேசத்தை கட்டியெழுப்புவதிலும் பங்கெடுத்துள்ளன. நாட்டில் பயங்கரவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்