“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

🕔 October 4, 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – 

ட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது.

தனது கட்சிக்காரர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கற்றுக்கொடுத்த கொள்கை என்ன ?

‘தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே’ என்பார்கள். அதுபோல் மு.கா. தலைவர் காட்டிக்கொடுத்த பாதையிலேயே அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பயணிக்கின்றார்கள்.

அதாவது முஸ்லிம் காங்கிஸின் தலைமைப் பதவியை ரஊப் ஏற்றதிலிருந்து, ஐ.தே கட்சி சார்ந்த முதலாளித்துவவாதிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதும், பின்பு அவர்கள் தோல்வியடைந்ததும், சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சர் பதவியை அலங்கரித்ததும்தான் கடந்தகால வரலாறு.

இன்றைய ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியில் கோட்டாபய ஜனாதிபதியாக இல்லாதிருந்திருந்தால், பொதுத் தேர்தல் முடிந்த கையோடு இன்றைய ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சராகவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதி அமைச்சராகவும் இருந்திருப்பார்கள்.

இதனை நியாயப்படுத்துவதற்காக, அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு கல்லை நாட்டி விழா எடுத்திருப்பார்கள். பின்பு தேர்தலில் ராஜபக்ஷக்களை திட்டி தீர்த்தமையினை மக்களும் மறந்திருப்பார்கள்.        

இதுதான் கடந்த காலங்களில் நடைபெற்றுவந்த முஸ்லிம்களின் ‘தனித்துவ’ அரசியலாகும். இந்த அரசியல் – இன்றைய ஜனாதிபதி கோட்டாவிடம் பலிக்கவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்திருந்தால் இதுதான் நடைபெற்றிருக்கும்.

அதுமட்டுமல்லாது மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்குப் பின்பு நடைபெற்ற எந்தவொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும், அபிவிருத்தி பற்றிய வாக்குறுதிகளுக்கு குறைவிருக்கவில்லை. அதாவது ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள குறைபாடுகளை அங்குள்ள மக்களிடம் கூறி, அதனை அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்குவதே கொள்கையாக இருந்தது.

தலைவர் அஷரபின் உரைகளை நேரடியாக கேட்காத இன்றைய இளைஞர்களுக்கு – கொள்கை அரசியல் தெரியாது. அரசியல் என்றால் அபிவிருத்தி என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் தலைவர் அஷ்ரபின் காலத்தில் உரிமை அரசியல் பற்றி அறிந்தவர்களின் உணர்வுகளும் இப்போது இல்லை. அதாவது கொள்கை அரசியல் மழுங்கடிக்கப்பட்டு அபிவிருத்தி அரசியல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.    

இரண்டு தசாப்தங்களாக அபிவிருத்தி அரசியலை மாத்திரம் மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு, திடீரென ”அபிவிருத்தி எமது கட்சியின் கொள்கையல்ல” என்று கூறினால் அதனை எப்படி எடுத்துக் கொள்வது?

அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை, கட்சி யாப்புக்கு கட்டுப்படாமல் அரசாங்கத்துக்கு கூஜா தூக்குகின்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு வழங்கியதன் மூலம், மு.கா. தலைவர் ஹக்கீம் தனது எம்.பிக்களுடன் புரிந்துணர்வுடனேயே பயணிக்கின்றார் என்பது புரிகின்றது.

இவ்வாறான கொள்கையற்ற அரசியல் நிலைப்பாடு காரணமாக மக்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் எழுத்துள்ள வியாபார அரசியலுக்கு எதிரான எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்காகவே, தனது எம்.பிக்களை எச்சரிப்பது போன்று ரஊப் ஹக்கீம் நாடகமாடுகின்றார்.

அரசியலை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இதன் உண்மை புரியும். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்